Friday, 21 November 2008

வேஷங்கள்

நண்பரே !
அவசரப்பட்டிருக்க வேண்டாம்

எனக்கு மொத்தமாய் எத்தனை முகங்கள் என்று
நானே தேடித்தெளியாத நிலையில்
இரண்டு வேஷம் என்று சொல்லி
அவசரப்பட்டிருக்க வேண்டாம்

ஈராயிரம் வேஷங்கள் கட்டி
உறவு கெடுக்கும் மனங்களுக்கு மத்தியில்
இரண்டு வேஷம் என்பது ஆறுதல் தான் எமக்கு.

இரண்டு முகமூடிகள் சுமந்தென்ன?
வியர்வை பிசுக்கும்முள்தாடி எரிச்சலுமென
சுயபாதிப்பு தாண்டி
யாரையும் காயப்படுத்தியதில்லை
எனது முகமூடிகள்.

யோசித்து பார்த்தால்
மன மூடியை விட அசிங்கமாகவும் அருவருப்பாகவும்
இல்லவே இல்லை இந்த முகமூடிகள்.

ஆன்மாவுக்கு வேஷங்கட்டிக்கொள்வதைவிட
அநீதமாய் தெரியவில்லை
இந்த முகவேஷம்.

வயிற்றுப்பாட்டிற்கும்
அதிகார பசிக்கும்,
பரஸ்பர வெறுப்பிற்க்கும்,
மனமுரண்டிற்க்கும்
எனக்கு தெரிந்து என் வேஷங்கள்
பயன்பட்டதேயில்லை.

என் புரிதல்படி
ஆமாம் சாமிகள் தான் அம்மண சாமிகள்.
அதிகம் பேசாதவர்கள் ஆரோக்கியசாமிகள்.

நிதர்சனங்கள் தாண்டி
நீங்கள் வருணிப்பதுதான் உலகமென்றால்
குருடனாகவே இருந்து விட்டு போகிறேன் நான்.