Wednesday, 25 November 2015

பரங்கிபேட்டையில் மாறவேண்டிய அடையாளம்

( எச்சரிக்கை : நீண்ட பதிவு... பொறுமையுடன் படிக்க விரும்புபவர்களுக்கு மட்டும்  )

பரங்கிபேட்டையில் மாறவேண்டிய அடையாளம்  
.  
நமது ரத்தத்தின் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் போல் இன்னொரு அணுவாக நம்முள் ஊறிப்போனவை விளையாட்டுகள். எலிமெண்டரி பள்ளியில் பேந்த பேந்த நாம் நுழைந்த பொழுதில் அம்மா, ஆடு, இலை -க்கு முன்பு கற்றுக்கொண்ட  பாண்டி, உண்டே(ஏ..ஏ..)  பால், திருடன் போலிஸ் ஆட்டங்கள் போன்ற விளையாட்டுகளைத் தற்போது பரங்கிபேட்டையின்  கற்பனை மியூசியத்தில் மட்டுமே பார்க்கலாம் போலுள்ளது. 

இரவு ஏழுமணி முதல்  தெருக்களில் சுடர்விடும் குண்டு பல்பும், பால் நிலவும் சாட்சியாக நாம் விளையாடிய கண்ணபொத்துற ஆட்டம் முதல் அத்தனையும் இன்றைக்கு நம் வாழ்க்கையின் ஐஸ்க்ரீம் பக்கங்கள்.  ஐஸ்பாய்க்கு ஒளிந்து ஆட ஒரு தெருவில் ஆயிரத்தி நாற்பதெட்டு மறைவிடங்கள் உண்டு அப்போது. சில சமயம் ஏரியா விட்டு ஏரியா தாண்டி போய் விளையாடும் தீரர்கள் எல்லா க்ரூப்பிலும் உண்டு. கொல்லைகளில் புகுந்து அடுத்த தெருக்களில் வெளியேறுவது, மரக்கிளைகளில் ஒளிந்திருப்பது, ஒற்றர்கள் செட் பண்ணி ஆடுவது என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வுக்கே சவால் விடும் தொழிநுட்ப திறமை நம்முடையது.
பேதமற்ற கூட்டணிகளும், வன்மங்கள் இல்லாத சண்டைகளும் எமது விளையாட்டின் தவிர்க்க முடியா அங்கங்கள்.
உத்தி பிரிப்பது என்பது இணைந்து விளையாடும் உத்தி. என்ன ஒரு அழகிய முரண்!
ஆண் ஆதிக்கம் ஏதுமற்ற சகோதர வாஞ்சையில் எந்த கல்மிஷமும் இல்லாத அந்த மோன நிலை பருவம், தற்போதைய இந்த நஞ்சூறிய மனங்களுக்குப் புதிதாகவே தோன்றினாலும் ஆச்சர்யமில்லை.
 
உம்மா வீட்டில் கற்றுக்கொண்ட ஒரு விளையாட்டு டெக்னிக்கை,  பாட்டியா வீட்டில் சென்று அறிமுகப்படுத்தும் பெருமை இருக்கிறதே. ஆஹா..
திருமண கொண்டாட்டமும், சந்தலும், மவ்லூதும் ஒரு விளையாட்டுத் திருவிழா நாள்தான். 
தற்போது நிலவொளி இருக்கிறது; ராக்கதைகள் இல்லை. 
உணவு இருக்கிறது; ஊட்டி விட வேண்டிய உம்மாமார்கள் சீரியல்களில் மூழ்கிபோய் உள்ளனர்.
.
தற்போதைய ஒரே தேசிய பொழுது போக்காக விதிக்கப்பட்டு விட்ட டி. வி, கற்றுகொடுக்கும் கெட்ட விளையாட்டுகள் தெரிந்தும் நம் பிள்ளைகளை அருகில் அமர்த்திக்கொண்டு சிரிக்கிறோம்; அழுகிறோம்; சப்பாணிகளாக அவர்களை ஆக்கிக்கொண்டு இருக்கிறோம். 

வழக்கம் போல ஒரு பெருமூச்சுடன் அடுத்து செல்வோம்.


நல்ல கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, சாலை, சுற்றுச்சூழல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் என ஒரு சமுதாயதம் தன்னிறைவு பெற்றுள்ளதின் அடையாளம் பல உள்ளன.
விளையாட்டு பற்றிய ஆர்வமும், அதற்கான கட்டமைப்பும் அதில் ஒன்று. 
.
நமதூர் பலதரப்பட்ட விளையாட்டுகளில் சிறந்து இருந்தாலும் (அப்படித்தான் முதலில் சொல்லிக்கொள்ள வேண்டும்) பேட்மிண்டன்(பூப்பந்தாட்டம்) மற்றும் ஷட்டுல் காக் ஆகியவையே பிரதானமானவைகளாக இருந்து வருகிறது. சைடு வாக்காக டென்னிசும், புட்பால் மற்றும் வாலி பாலும் அப்பப்போ லைட்டா விளையாடி பார்த்துக்கொள்வோம். கரிக்கட்டு, சாரி கிரிக்கெட் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.   
இந்தப் புலம்பலின் நோக்கம் வெறும் உணர்வு தூண்டல் அல்ல.
நன்றாக சிந்தித்துப் பார்த்தோமென்றால் விளையாட்டுகளுடன் சம்பந்தப்படாதவர்கள் நம்மில் கிட்டத்தட்ட யாருமே இல்லை. என்னை மாதிரி பந்து பொறுக்கியாவது போட்டிருப்போம். கனவும் ஆர்வமும் நம்மில் அனைவரிடமும் அதிகமாகவே உள்ளது. ஆனால், நம்மில் பலர் வெளிநாடு சென்று விட்டதால் தொடர்ச்சி என்பது இல்லாமல் போய் எந்த விளையாட்டிலும் ஐகான்களை, (icons, legends) ஜாம்பவான்களை அல்லது நல்ல முன்மாதிரிகளை உருவாக்க முடியாமல் போய்விட்டது/விடுகிறது!


 
ஒரு நல்ல சமுதாயம் விளையாட்டினை முக்கிய ஆரோக்கிய குறியீடாக கொண்டிருக்கும். இஸ்லாம் உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டிற்கு மிகுந்த முன்னுரிமை தருவது நாம் அறிந்ததே.
சமீபமாக (வாத்தியாப்பள்ளி திடல் பகுதியில் வழமையாக விளையாடி வந்த) சகோதரர் மக்தூம் தலைமையிலான சில இளைஞர்கள் கால்பந்து விளையாடுவதைக் காண நேர்ந்து ஸ்தம்பித்து போனேன். அத்தனை நேர்த்தி, ஒழுங்கு, திறமை, புட்பால் விளையாட்டிற்குத் தேவையான விட்டுக்கொடுப்புகளுடன் ஒரு பிரெண்ட்லி டீம். ஒரு ஐரோப்பிய டீம் பரங்கிபேட்டையிலா என்ற பிரமிப்பு தவிர்க்க இயலாமல் வந்தது.
பிறகு வாலிபால் டீம் ஒன்று பெரியதெரு மக்தும் அப்பா பள்ளி அருகில் விளையாடிக்கொண்டு இருந்தது. இப்படி பல இடங்களில் இது போன்ற அக்கினி குஞ்சுகளை நம்மில் பலர் கண்டிருப்போம். 
பல இடங்களில் இவ்வாறு சிதறி போய் இப்படி இருக்கும் இவர்களை ஒன்றிணைப்பது முக்கியம் அல்லவா? அதற்கான சாத்தியம் நாம் முயன்றால் உருவாகாதா?
இப்படி செய்தால் என்ன என்று தோன்றியது :  
SPORTS  FEDERATION OF PORTONOVO என்ற பெயரில் ஒரு தாய் சங்கம் அமைப்பது.
* ஒவ்வொரு விளையாட்டில் இருந்தும் இரண்டு பிரதிநிதிகளை (பேட்மிண்டன் இரண்டு நபர்கள், புட்பால் இரண்டு நபர்கள்.. கிரிக்கட் இரண்டு நபர்கள்...  and so on..) அந்தச் சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கசெய்வது. இவ்வாறு இணைத்து வலிமையான ஒரு அமைப்பாக அதனை கட்டமைப்பது சாத்தியமே..



இந்த பெடெறேஷனின் பணிகள்: 
* பரங்கிபேட்டையின் ஓட்டு மொத்த விளையாட்டு நடவடிக்கைகளை அரவணைத்து ஒருமுகப்படுத்துவது.
* வருடா வருடம் ஒவ்வொரு விளையாட்டிற்கும் அல்லது அனைத்து விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஒரு மிகப்பெரும் போட்டி நடத்துவது. விளையாட்டு திருவிழா போல. அதன் மூலம் அந்தந்த விளையாட்டில் சிறந்தவர் outstanding personality கண்டறியப்பட்டு அவர்களுக்கான அங்கீகாரம் - அனைத்து நிலையிலும் - வழங்குவது!
* பள்ளிகளுக்குத் தாமாக சென்று அவர்களில் உள்ள இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் திட்டங்களை தீட்டுவது.
* பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளை நடத்தும் அதாரிடியாக இந்த பெடரேஷன் விளங்குவது.
* ஊரில் இல்லாமல் போய் விட்ட மிகவும் அடிப்படை தேவையான உடற்பயிற்சி கூடம் சிலவற்றை முயன்று உருவாக்குவது.
* ஊருக்கு முக்கிய தேவையான ஒரு வெளி விளையாட்டரங்கம் (திடல்)  (outdoor stadium ) மற்றும் உள் விளையாட்டரங்கம் (indoor stadium) ஆகியவற்றை அமைப்பது. (இதற்கு மிகவும் பெரும் பொருட்செலவு தேவை என்பதால் இதனை அரசிடம் வலியுறுத்துவது அல்லது அரசு/தனியார் குழுக்களுடன் இணைந்து உருவாக்க முயற்சிக்க வேண்டும்)  (பிராக்டிகலாக யோசித்தால் இதுபோன்ற சில விஷயங்களை இவர்களை போன்ற டீம் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. )
* எங்கெல்லாம் நகர்கள் உருவாகின்றனவோ அங்கெல்லாம் விளையாட்டிற்கென இடம் ஒதுக்க வலியுறுத்துவது.
* இதன் நிர்வாகிகள் விளையாட்டு ஆர்வமுள்ளவர்களாக இருந்தாலும் இதன் பொருளாளர் ஒரு இறைவனுக்கு அஞ்சும் ஒரு (preferably) பணக்காரராக இருப்பார். அவரே எந்தெந்தப் பணிகளுக்கு எப்போது எவ்விதம் செலவிடலாம் / வசூலிக்கலாம் என்பதை ஷூரா அடிப்படையில் முடிவு செய்வார்.  


இதனால் இன்னும் பல பயன்கள் உள்ளன. 
தேசிய, ஏன்... இண்டர்நேஷனல் அளவில் நமது ஊர் டீம்கள் பங்கு பெற இவ்வாறு ஒருங்கிணைந்த ஒரு அமைப்பு என்பது ஒரு மிகப்பெரும் பலம் ஆகும். 

மூணாவது தெரு முக்குட்டுல மூணு நாளைக்கு கிரிக்கட் விளயாடப்போறோம் ஏதாவது கொடுங்களேன் என்று ஆர்வமுள்ள நம் பிள்ளைகள் கையேந்துவதை விட professional ஆக கலெக்டர், அமைச்சர் வரை பங்களிக்க செய்ய இந்த பெடேறேஷனின் ஒரு லெட்டர் ஹெட் போதுமானதாக இருக்கப்போவதை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் ? 
   
கண்ணை மூடி கொஞ்சம் யோசித்தால் இன்னும் நிறைய வழிகளும், காரணிகளும், பயன்களும் நம் அனைவருக்கும்  தோன்றும் என்று நம்புகிறேன். (அதனை பின்னூட்டமாக தெரிவியுங்களேன்)  

இதனைப் பொறுமையுடன் படித்தவர்களுக்கு நன்றி!
  
நான் ஒரு பாதசாரி. எனக்கு எட்டிய சில யோசனைகளைப் பதிந்துள்ளேன். 
இப்படி புலம்பும் எம்போன்றவர்கள் மத்தியில், விஷயங்களைச் சாத்தியமாக்கும் செயல்திறன்  படைத்தவர்களும் நிறையபேர் இருக்கிறார்கள் என்பது உண்மையே.
 
அவர்களுக்கு இதன் மூலம் எனது அழைப்பு என்னவென்றால் இதனை சாத்தியமாக்கிட முனையுங்களேன். அல்லாஹ் அருள் புரிவான்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய போதுமானவன்!