Wednesday, 3 April 2024

ஏகாந்தம் இங்கே கிடைக்கும்

 ஏகாந்த தனிமைக்கு

அப்ரிதிக்கு குழப்பமாக இருந்தது ....

 அப்ரிதிக்கு குழப்பமாக இருந்தது .


இந்த பள்ளிவாசல்கள் வெளி ஸ்பீக்கர்கள் அலற விடும் விஷயத்தில்...  

என்னடா இது,
குரானிலும் எடுத்து காட்டியாயிற்று

ஹதீஸ்களிலும் எடுத்து காட்டியாயிற்று

சவூதி உலமாக்கள் ஃபத்வா, ஜமாஅத்துல் உலமா, தேவ்பந்த் ஃபத்வா என்று அனைத்தும் சொல்லி பேசியாயிற்று.

கிட்டத்தட்ட ஊரின் அனைத்து உலமாக்களும் மதனியும் கொள்கை வேறுபாடில்லாமல் வெளி ஸ்பீக்கர் தவறு என்று சொல்லிவிட்டார்கள்.

இவர்கள் வக்த் தொழுகைக்கு வெளி ஸ்பீக்கர் ஒலிபரப்பை நிறுத்துவார்கள் என்று பார்த்தால் தராவிஹ்கிற்கு ரெண்டு கீர் போட்டு தூக்கி கடைசியில் நள்ளிரவு 2 மணி தொழுகைக்கும் இப்படி ஐந்தாவது கீரில் அலற விடுவதுதான் அப்ரிதிக்கு குழப்பம் அதிகமாக காரணம்..

என்ன தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ?
 
ஒருவேளை இந்த கிராஅத் இனிமையில் மயங்கி சுத்துப்பட்டு அனைத்து காபிர்களும் ஓடோடி வந்து கலிமா சொல்லி விழுந்து  புரண்டு அழுவார்கள் என்றா ?
அல்லது
 
அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள சிறுகுழந்தைகள் வயதான முதியோர்கள் அனைவரும் அதை கேட்டு கண்ணீர் விட்டு ஏங்குவார்கள் என்றா ?
அல்லது

எப்படியாவது இந்த வோர்ல்டை தாண்டி கேலக்சியை தாண்டி சித்ரத்துல் முன்தஹாவை தட்டி ஜொலிக்க செய்திடவேண்டும் அர்ஷையும் அடைந்திட வேண்டும் இந்த குரல்கள் என்றா ?

அப்ரிதிக்கு  உண்மையிலேயே புரியவில்லை;   குழப்பமாக இருந்தது .

சரி பதிலுக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால்
எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கா  என்று கேட்பவர்கள்,  இன்று .. போதுமானதற்கு மேல் ஆதாரங்கள் கொடுத்தும்
ஷைத்தான் அதை கேட்டு ஓடிவிடுவான், ஒளி பரவும்  என்றெல்லாம் எந்த ஆதாரமில்லாததை சொல்கிறார்கள்.

ஸ்பீக்கரில் குரானை கேட்டு ஷைத்தான் ஓடிவிடுவான் என்றால் தெருவுக்கு 4 ஸ்பீக்கரை கட்டி 24X 7 ஓத  விடலாமே. 
இதற்கு என்ன ஆதாரம்.?
ஒளி பரவும் எனபதும் இதே வகையறா தான்.!!!

தொழுகையில் ஓதப்படுவது பள்ளிவாசலில்  தொழுவதற்கு வந்து வரிசையில் நிற்பவர்களுக்கா அல்லது அண்ட சராசரத்தில் அனைவருக்குமா ? .

சரி
இதுதான் புரியவில்லை என்றால் இன்னொரு கூத்து அதைவிட குழப்பமாக இருந்தது அப்ரிதிக்கு...

 ஜும்ஆ என்பது ஒரே பள்ளிவாசலில் (மீராப்பள்ளி) இருந்தது என்று கேள்விப்பட்டுள்ளேன். அப்புறம் இடமின்மை, கொள்கை காரணங்கள் சொல்லிக்கொண்டு சில பள்ளிகள் பிரிந்து சென்று ஜுமுஆ தொழ துவங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறகு கோவிட் காலத்தில் வேறு வழியில்லாமல் அணைத்து பள்ளிகளிலும் ஜும்மா தொழப்பட்டது   .

ஆனால் பெருநாள் தொழுகை என்பது ஊர்வாசிகள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடுவதற்கான தொழுகை. இந்த வருடம் ஈத் ( பெருநாள் ) தொழுகை கிட்டத்தட்ட அனைத்து சிறிய பெரிய பள்ளிகளிலும் தொழப்பட்டது எந்த வகையிலும் லாஜிக் புரியவில்லை.

இடமின்மையா ?
நபி வழி தொழுகை என்றா ?
தன் பள்ளி என்ற பெருமைக்கா?
வசூல் காரணமா?
இல்லை இன்னும் கோவிட வழிகாட்டுதல்கள் மூளைக்குள் சுற்றி சுற்றி வருகிறதா ?
பள்ளியை விளம்பரப்படுத்தும் அதன் மூலம் தனக்கு விளம்பரம் தேடும் அற்ப முயற்சியா ?

எதுவும் புரியவில்லை
 
சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஊரின் பெருநாட்களில் அனைத்து பள்ளிவாசல்களில் இருந்தும் வெண்ணுடை அணிந்த முஸ்லிம்கள் அணியணியாக திரண்டு தக்பீர் தஹ்மீத் சொல்லியவாரே மீராப்பள்ளியை நோக்கி வருவார்கள். 
நூற்றுக்கணக்கில் நமதூர் வாசிகள் அவ்வாறு திரண்டு வரும் காட்சி கண்கொள்ளா மகோன்னத காட்சியாக இருக்கும் என்றெல்லாம்  வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள். அதெல்லாம் வெறும் கனவாகவே போய்விடுமோ ??....

முஹல்லா தோறும் ஜும்மா
முஹல்லா தோறும் பெருநாள் தொழுகை
அடுத்து முஹல்லா ஐக்கிய ஜமாஅத்
அடுத்து முஹல்லா விற்கென தனி தப்தர் ....

என்று இதன் நீட்சிக்கான சாத்தியக்கூறுகளை யோசித்து பார்த்தால் இன்னும் குழப்பம் அதிகரித்தது அப்ரிதிக்கு

தன்னை ஒரு சிவிலைஸ்ட் சொசைட்டி என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சமுதாயம் செய்யக்கூடிய காரியங்கள் இதுவா என்ற கேள்வி மனதிற்குள் பெரிதாகியது..

இனிமேலாவது தனி தனி பெருநாள் தொழுகைகளை தவிர்த்துவிட்டு முடிந்தளவு ஒரே பள்ளியில் மக்கள் தொழ வருவார்களா என்ற ஆர்வமும் விடை தெரியாத குழப்பமும் சூழ அப்ரிதி ஒரு காகிதத்தை எடுத்து கொண்டு அமர்ந்தான் ...

எழுத ஆரம்பித்தான்


...
..அப்ரிதிக்கு குழப்பமாக இருந்தது ....

இருப்பிட சிக்கல் - யாருக்கு ? உங்களுக்குத்தான் சார்

 இருப்பிட சிக்கல் என்பது எங்கோ பாலஸ்தீன மக்களுக்கு காஷ்மீர் மக்களுக்கு என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தோம்.


மேவாட் பிராந்திய, நூஹ் மாநில  மக்களுக்கு வந்து தற்போது நமக்கு வந்து நிற்கிறது.

இங்கே எதிரி இந்துத்துவாதிகள் அல்ல IL &FS பவர் பிளான்ட்

நமது ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலம் நீர் காற்று ஆகியவை கடுமையாக மாசு அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

நமது அருகாமை கிராமத்து மண்ணில் அதாவது நம் மண்ணில் போரோன் எனும் ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட முப்பது மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

விவசாயம் செய்வதற்கு தகுதியற்ற நிலமாக நமது நிலங்கள் மாறிவிட்டதாக அந்த அறிக்கை சொல்கிறது.

நெய்வேலிக்கு அருகில் உள்ள நிலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவீடு 250 மடங்கு மெர்க்குரி (பாதரசம்) இருப்பதாக ஆய்வு சொல்கிறது.

நெய்வேலி எங்கோ 2500 கிலோமீட்டர் தொலைவில் இல்லை. 25 கிலோ மீட்டர் தான்.

ஏற்கனவே நெய்வேலி பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதால் நமது கடலூர் மாவட்டமே மிகப்பெரும் அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒத்துக் கொண்டிருந்தார்.

தற்போது IL & FS பவர் பிளான்ட் ஒரு பகாசுர அரக்கனாக நம்முன் நிற்கிறது.


உடன் இணைக்க பட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையை பார்வையிடுங்கள்.


பொதுவாக நிலக்கரியை எரிப்பதால் எழும் சாம்பல் (பிளைஆஷ்) தான் ஆபத்து என்பார்கள்,  அது மட்டும் ஆபத்து அல்ல.
நிலக்கரியை எரிப்பதால் கார்பன, மெர்க்குரி, சல்பர்,  முதலிய ரசாயனங்கள் பெருமளவில் வெளிப்பட்டு காற்றையும் நிலத்தையும் நீரையும் நிலத்தடி நீரையும் கடுமையாக பாதிக்கும்.

காரணங்களே தெரியாமல் நாம் அனுபவிக்கும் சுவாசப் பிரச்சினைகள், சிறுநீரக கோளாறுகள், தோல் நோய்கள் இவற்றிற்கு மூல காரணமாக பவர் பிளான்ட் இருக்கலாம்..

 பவர் பிளான்ட்டை சுற்றி 25 கிமீ இடத்தில் உள்ள ப்ளோரா பவுனா என்று சொல்லப்படும் செடி கொடி மரங்களையும் சாம்பல் படிந்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்தொழிக்கும்.

கடந்த காலங்களில் உலகெங்கும் இயங்கிய பவர் பிளான்டுகள் பற்றிய ஆய்வறிக்கைகள் சொல்வது இதைத்தான்.

வாழத் தகுதியற்ற இடமாக கடலூர் ஆகிவிட்டது என்று எங்கோ செவ்வாய் கிரகத்தில் கடலூர் இருப்பதாக நினைத்து பேசி வந்தோம்.
தற்போது நமது ஊரே பத்திரிகை செய்திகளில் முதன்மை இடாத்தில் வரத்துவங்கியுள்ளது

பெரும் போராட்டங்கள் அல்ல ஒரு முணுமுணுப்பு கூட இல்லை
இப்படி ஒரு அழிவு சக்தி வருகிறது என்று கூட தெரியாமலே அமைதியாக இருந்து விட்டோம்.

இப்போது நம் வாழ்வியலுக்கு பெரும் சிக்கலாக வந்து நிற்கும் இதை நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் ?
என்னதான் செய்யப் போகிறோம்?

குர்ஆன் அகாடமி

 குர்ஆன் அகாடமி


நம்மை படைத்த நம்முடைய இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு விட்டன.

நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள்.

வஹியின் வாசலும் மூடப்பட்டு விட்டது.

இப்போது நமக்கும் இறைவனுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு அவனுடைய வார்த்தைகளான இறைவேதம் குர்ஆன் மட்டும் தான்.

தொழுகை என்பது வலுவுடன் கட்டாயமாக்கப்பட்டதும் பள்ளிவாசல்களில் கண்டிப்பாக வந்து தொழ வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டதற்கு  குர்ஆன் எனும் இறைவனின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தப்படுவதற்காக என்பது ஒரு முக்கியமான காரணம்.

குர்ஆன் ஓதப்படும் போது வேறு எதையும் நாம் செய்யக்கூடாது, செவி தாழ்த்தி கேட்க மட்டும்தான் செய்ய வேண்டும் என்று குர்ஆன் சொல்வதற்கும்

போதையோடு இருக்கும் நிலையில் தொழாதீர்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிய வேண்டும் என்று குர்ஆன் எச்சரிப்பதற்கும்

பின்னணியில் உள்ள காரணங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

இந்த உம்மத்தின் மீது படிந்திருக்கும் ஏராளமான பித்னாக்களில் தலையாய பித்னாவாக குர்ஆனிலிருந்து இந்த உம்மத் விலகி நிற்பது, குர்ஆனோடு தொடர்பில்லாமல் இருப்பது என்பதை சொல்லலாம்.

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன்
ஒன்று இறைவனின் வேதமாகிய குரான் இரண்டாவது எனது குடும்பத்தினர் அஹ்லே பைத்,
 என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது..

குர்ஆனை ஓதுவதில் உள்ள நன்மையை உணர்ந்து நியமமாக ஓதி வரும் நாம், அதன் உள்ளர்த்தத்தை, அது நமக்கு எடுக்க விரும்பும் பாடத்தை படிக்க மறந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

இஸ்லாத்தின் கடும் எதிரியாக விளங்கிய உமர் ரலி அவர்கள் குர்ஆனின் சில வரிகளை படித்தவுடன் அவர்களை தலைகீழாக மாற்றிய அந்த அற்புத சக்தி இன்று நம்மிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதன் பொருள் தான் என்ன?

மாபெரும் சாம்ராஜ்யங்களை ஈர்க்குச்சி போன்ற வாட்களை கொண்டு வீழ்த்திய அந்த உன்னத மனிதர்களிடம் குரானை தவிர வேறு எந்த ஆயுதங்கள் இருந்தது?

வெள்ளையர்கள் இஸ்லாமிய உலகினை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முயன்ற போது,  அவர்கள் செய்துவற்றில் மிக மிக முக்கியமானது குர்ஆனை இந்த உம்மத்தில் இருந்து விலக்கியது அல்ல,  அது முடியாது என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தந்திரமாக குர்ஆனிய மொழியை நம்மிடம் இருந்து நீக்கி அதற்கு ஆங்கிலத்தை ஒரு மாற்றாக பிரதியிட்டார்கள்.

 குர்ஆனை ஓதுவது மட்டுமே மிகப்பெரும் நன்மை என்று நம்மை திசை திருப்பினார்கள்.

 இதுவே அவர்களின் பெரும் வெற்றியாகவும் இந்த உம்மத்தின் மிகப்பெரும் சோதனையின் ஆரம்பமாகவும் அமைந்து விட்டது.


ஆக,
இந்த பித்னாவிலிருந்து இருந்து மீண்டு எழுவது எப்படி?

குர்ஆனிய அரபியை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

குர்ஆன் ஓதும் போது அது நமக்கு வார்த்தை வார்த்தையாக புரிய வேண்டும்.

 தொழுகையில் குர்ஆன் ஓதப்படும் போது அதன் பொருள் உணர்ந்து நாம் அழுது கரைய வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், குர்ஆனை பொருள் அறிந்து ஓதுவதற்கு,
 குர்ஆனிய அரபிக் மொழியை கற்றுக்கொள்வதற்கு ஒரு எளிய தளமாக குர்ஆன் அகாடமி துவங்கப்படுகிறது.

மிக எளிமையான
மிக சுருக்கமான
மிக சுவாரசியமான வகுப்புகளாக அமைவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

நாளை நம் அதிபதின் முன்
அவன் வழங்கிய வேதத்தை  நாம் எப்படி கையாண்டோம் அதனுடன் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று நல்ல முறையில் பதில் சொல்வதற்கு இது ஒரு வழியாக அமையும் என்று
 நம்பிக்கை வைப்போம்.

இந்த முயற்சிக்கு அல்லாஹ்  அருள் புரிந்தவர்களை தவிர வேறு யார்தான் கைகோர்த்து நிற்பார்கள்... ஒத்துழைப்பார்கள்..

கஜா புயலுக்கு பின் - சில படிப்பினைகள்

 கஜா புயல் வீசிய  சில வாரங்களுக்கு பின் அதிராம்பட்டினம் சகோதரர் ஒருவரிடம் பேசினேன் அதற்கு பிறகு என் மனதில் எழுந்த எண்ணங்கள் இவை : 


அதிராம்பட்டினம் என்றோர் முஸ்லீம் ஊர். மிகப்பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் வாழும் ஊர். என்னதான் பாலைவன எண்ணெய் சம்பளம் ஈர்த்தாலும், காலம் காலமாக அவர்கள் கைக்கொண்டுவந்த அடிப்படை வியாபாரங்களையும் அந்த பகுதியின் சமூக மேலாண்மையையும் அவர்கள் விட்டுத்தரவேயில்லை. ஊரைசுற்றியுள்ள தென்னை தோப்புக்கள் கிட்டத்தட்ட 90 %  மேல் அவர்களுடையதுதான். சுற்றுப்பட்டு கிராமங்களுக்கு அவர்கள்தான் சமூக பொருளாதார சார்பு மையம்.  பஞ்சாயத்து உள்ளிட்ட அதிகார மைய்யங்களும் அவர்களே.   

நம்மை கொஞ்சம் பார்ப்போம்... 
பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள நிலபுலன்கள் - சொல்லப்போனால் சிலபல கிராமங்களே முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்த காலங்கள் ரொம்ப பண்டைய காலமெல்லாம் அல்ல,  மிக சமீபத்தில் கூட இருந்தது.

நமக்கு சொந்தமான நிலங்களில் - நேரிடையாகவோ, குத்தகை விட்டோ - அரிசி முதல் அனைத்தையும் பயிர் செய்து வந்தோம்,  

கடல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த வணிகங்களில் 100, 150  வருடங்கள் முன்பு வரை நாம்தான் அவற்றை ஆண்டு வந்தோம். குறிப்பாக மீன், இறால் போன்ற கடல் உணவு சார்ந்த வணிகத்தில் - சில பத்து வருடங்கள் முன்பு வரை -  தனி முத்திரை பதித்து வந்தோம். அப்டீன்னா என்பவர்கள்  அன்னங்கோயில் சென்று பார்க்கவும். 

மாற்று மருத்துவம் என்று இப்போது சொல்லப்படும் மருத்துவ முறைகளிலும் குறிப்பாக முக்கிய மருத்துவமான யுனானி மருத்துவத்தில் நமதூர் கிட்டத்தட்ட மருத்துவ மையமாக திகழ்ந்தது. 

குடும்பம் குடும்பமாக செய்த துணிகளுக்கு சாயமிடுதல், சேமியா ஜவ்வரிசி போன்ற உணவு பதப்படுத்தல் .... என்று அன்றே பொருளீட்டலில் வெரைட்டி காட்டினோம்.

கால்நடை வளர்ப்பில், குறிப்பாக குதிரை வளர்ப்பு, ஆடு, மாடு கோழி  வளர்ப்பு இவற்றை வாழ்வியல் கலையின் ஊடாகவே செய்ய பழகி இருந்தோம். இறைச்சி வணிகத்தில் நாம் அன்றும் இன்றும் வேற லெவல் தான். 

சுருக்கமாக சொன்னால் நாம் காலம் காலமாக இந்த பூமியில் அழுத்தமாக கால் பதித்து வாழ்ந்து வந்தோம். இப்போது தரைக்கு மேல் சில நூறு அடிகள் மிதந்து வருகிறோம். வேர்களை மறந்து பிடிப்புக்கள் இழந்து...

நம்மை மிதக்க செய்த அரபு நாடுகளின் எண்ணெய் வாச மாயை  தற்போது மங்கத் துவங்கியுள்ளது. மீண்டும் வேர்களை பிடித்து செழிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.    

அதிராம்பட்டினத்து முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கும் சென்றார்கள்.. தங்கள் ஊரின் பாரம்பரிய அடையாளங்களையும் தக்கவைத்துக்கொண்டார்கள்.  வயல்வெளிகளில் வேளாண்மை நடந்தது; சுற்றியிருந்த கிராமங்களுக்கு வேலை வழங்கி வந்தார்கள். சமூக மற்றும் பொருளாதார மேலாண்மையை  தக்க வைத்துக்கொண்டார்கள். 

கஜா புயல் போல் ஒரு துயரம் நிகழும் போது அவர்கள் மீண்டும் தலை நிமிர ஒரு மாற்று இருந்தது; இருக்கிறது.

நம்மை ஜஸ்ட் லைக் தட் மிஸ் பண்ணிவிட்டு சென்ற ஒரு சுனாமியோ, தானே புயல் போலவோ  அல்லது வேறு எதுவுமோ நம்மை உருக்குலைத்தால், சமூக ரீதியாக நம்மை மீள்கட்டமைத்துக்கொள்ள அரபுநாடுகளில் நாம் உயிர் விட்டு சேர்த்த பொருளாதாரம் தவிர வேறு எதுவும் பிடிப்பில்லை நமக்கு. 

நமது முன்னோர்கள் கைக்கொண்ட பாரம்பரிய சமூக பொருளாதார வாழ்முறைகளை பற்றி சிந்திக்க நல்லதொரு சந்தர்ப்பம் இது.  

இந்த பதிவு நமது நல்லெண்ண சிந்தனைக்கு ...!

அன்புடன் 
ஹமீது மரைக்காயர். 

டூர் என்பது யாதெனில் (காயல்பட்டினம் விஸிட்)

 காயல்பட்டினம் சென்றிருந்தேன்.

என் நெடுநாள் கனவு.  

பரங்கிப்பேட்டைக்கும் காயலுக்குமான தொடர்பை செவி வழியாக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு இது ஒரு எதிர்பார்ப்பு பயணம்.

ஒரு நாள் பயணம்.

காயல் என்னை அவ்வளவாக ஏமாற்றவில்லை. ஆனால் பெரிதாக ஈர்த்துவிடவுமில்லை.

சில இடங்களில் 20 வருடத்திற்கு முந்தைய  பரங்கிப்பேட்டை தெரிகிறது. சில விஷயங்களில் லேட்டஸ்ட்.

தர்கா உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப பின்னாடியும்,
தெருவுக்கு தெரு மதரஸா, இஸ்லாமிய கல்விக்கூடங்களில் பரங்கிப்பேட்டை தொடமுடியா உயரத்திலும் இருக்கிறது.

அழகான வீடுகள், வீடுகளின் கட்டமைப்பு நேர்த்தியான but நெருக்கடியான ஒரு அமைவில் உள்ளது. (எனக்கெல்லாம் நாலு நாள் கூட தாங்காது ) ஆனால், தெருக்களுக்கு வராமலேயே மொத்த ஊரையும் முடுக்கின் மூலம் கடக்கும் பெண்களுக்கான பிரத்தியேக முறை அற்புதமானது. பிரமிக்க வைக்கிறது.
ஆனால் இப்போது 'எல்லோரும் எங்கேயும்' நிலை வந்துவிட்டது என்கிறார்கள்.

கிட்டத்தட்ட 60,000 மக்கள்  தொகை, 60 சொச்ச பள்ளிவாசல்கள், 20 முஸ்லிம் பள்ளிக்கூடங்கள்,  முஹல்லாதோறும் ஜமாஅத்கள், ஒன்றுபட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், ஏராளமான தரீக்கா மற்றும் கொள்கை பிரிவுகள்...
... டிப்பிக்கல் முஸ்லீம் ஊர்.

முன்பு வைரம் மற்றும் கற்கள் வணிகம். தற்போது....
யெஸ்..
வெளிநாட்டு சம்பாத்தியம்.
பக்கத்திலுள்ள கீழக்கரையை பணக்கார ஊர் என்கிறார்கள்.
பரங்கிப்பேட்டையை பற்றி அதிகமானோர்  தெரிந்திருக்கவில்லை.

ஊரைப்பற்றி அதன் பாரம்பரியம் பற்றியும் ஒரே ஒரு புத்தகம்தான் கிடைத்தது. (இதிலேயும் ஒற்றுமை!)

நான் சந்தித்த பல ஆளுமைகள் தங்களை அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் வழிவந்தவர்களாக சொல்லிக் கொள்கின்றனர். சிலர் நபி(ஸல்) அவர்கள் வழிவாராகவும், சிலர் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வழிவார் என்றும்.

பெண்கள் அதே நாணம், கண்ணியம். 
மிகச்சில கடலோர முஸ்லிம் கிராமங்களின் அடையாளமான வெள்ளை துப்பட்டி ஒன்று கூட பார்க்கமுடியவில்லை. . நிறைய புர்காக்கள்தான்.

தெருக்களின் பெயர்களில் ஒன்றில் (மட்டுமே) மரைக்காயர் என்று பார்க்க முடிந்தது... துப்பட்டி போன்று மரைக்காயரும் வழக்கொழிந்து போயுள்ளது. ஆனால் பற்பல குடும்ப பெயர்கள் புழக்கத்தில் உள்ளன.

காயல்பட்டினத்தின் ஊர் கட்டுப்பாடு காலம் காலமாக நமக்கு தெரிந்ததுதான். முஸ்லிம் குடியிருப்புக்களில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷன் கிடையாது       

வடகாயல், பழைய காயல் என்று இரண்டு உள்ளது. 
வரலாற்றில் கபாடபுரம் என்றும் அலைவாய் துறைமுகம் என்றும் காயல் என்றும் பற்பல இடங்களில் குறிப்பிடப்படுவது இன்றைய காயல்தான் என்கிறார்கள். 
ஊரின் சூழ உள்ள தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சூழலியல் சிக்கல்களை அனுபவிக்கும் விஷயத்தில் இவர்கள் நமக்கெல்லாம்  முன்னோர்கள்.

ரெயில் நிலையம் நமதூரைப் போன்றே ஊரிலிருந்து 4 கிமீ தள்ளி இருப்பது
  பயணிகள் நடைமேடை உயரம் குறைவு 
  ஒரேயொரு தண்டவாளம்  போன்றவை புன்னகைக்க வைக்கும் ஒற்றுமைகள்

attn  : சகோதரர் கலீல் அஹமது பாகவி அவர்கள்  .

வேன் பிடித்து போகத் தேவையில்லாத அழகான கடற்கரை. அயலார் எவரின் தொல்லைகளுமின்றி குடும்பம் குடும்பமாக பொழுது கழிக்க வருகின்றனர். பார்க்கவே நிறைவாக இருந்தது. ரமலான் மாத இரவுகளில் இன்னும் ஜெதபாக இருக்கும் என்கிறார்கள்,  .  

ஒரு நாள் பயணம் என்பதால் காயல்பட்டினம் பிரியாணி, தால்ச்சா பற்றி தெரியவில்லை. தம்மடை என்று ஒரு பனியாரம் (முட்டை பனியான் போல் உள்ளது) மட்டும் டேஸ்ட் பண்ணிபார்த்தோம்.

90s kids களுக்கு : பாக்கு முட்டாய், மிண்ட் முட்டாய், சக்கர முட்டாய் எல்லாம் கிடைக்கிறது.

காயல்பட்டினம் தான் காயல் என்ற ஒரு புத்தகம் பரிசளித்தார் டாக்டர் ஆர்.எஸ். அப்துல் லத்தீப் அவர்கள்.

எங்களுக்காக தம் பணியினையும் பாராமல் உடனிருந்த ஹாபிஸ்  ரஹமதுல்லாஹ் உஸ்தாத் அவர்களின்   தொடர்பில் 'தாவா சென்டர்' ஜக்கரியா நானா, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் அபுல் ஹசன் கலாமி (எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்)  எழுத்தாளர் சாலை பஷீர் போன்றோரை சந்திக்க முடிந்தது. அபுல் பரக்காத் அவர்களை சந்திக்க இயலவில்லை. 

எங்களுக்கு சிறப்பான காலை உணவை (பரோட்டா, இட்லி, பூரி, மட்டன், ஈரல், ... கலக்கல் டிபன்! ) அளித்த  ரஹமத்துல்லாஹ் உஸ்தாத், அவர்தம் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் அற்புதமான மதிய உணவு (அப்படியே பரங்கிப்பேட்டை கறி சுவை) அளித்த  பரங்கிப்பேட்டை சகோதரரின் ஹாபீழா மனைவியின் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தினையும் அருளையும் பொழிவானாக.

இதுபோல் இன்னும் ஒரு நாலு பக்கம்கூட  எழுதலாம். படிக்க ஆள் வேண்டுமே !!

முடிவாக,
என் நெடுநாள் சந்தேகம்.
காயல்பட்டினத்திலிருந்துதான் பரங்கிப்பேட்டைக்கு வந்து குடியேறினார்கள் என்று சொல்லப்படுவது குறித்து கிட்டத்தட்ட நான் சந்தித்த அனைத்து ஆளுமைகளிடமும் கேட்டேன்..
புத்தகம் எழுதிய பெரியவர் அப்துல் லத்தீப் அவர்கள் சொன்னது..
"சிம்பிள்!  உக்காஷா (ரலி) அவர்கள் உங்கள் ஊருக்கு வந்துள்ளார் அல்லவா? அப்போ உங்கள் ஊரில் முஸ்லிம்கள் வருகை கி.பி.640 கணக்கில் வருகிறது. நீங்கள் ஏன் எங்கிருந்தும் வரவேண்டும்?"

இது போன்ற 'காலம்'கள் '' நம்மை நாம் '' அறிந்துக்கொள்ள உதவும் என்று அடிப்படையில் எழுதப்படுகிறது.          

குறைந்த நேர பயணம் (10 மணி நேரம்) என்பதால் எனது அவதானிப்புக்கள் மற்றும் கணிப்புக்களில் தவறு இருக்கலாம். 
அறிந்தவர்கள் திருத்துங்கள். 
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

அன்புடன் 
ஹமீது மரைக்காயர்
மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை.

சென்னை புத்தக கண்காட்சி விஸிட்

 சென்னை புத்தக கண்காட்சி சென்றிருந்தேன்.


நியாயப்படி பார்த்தால் ஐஸ்கிரீமும், சேண்டவிச்சும் சென்ற தடவையை  விட கொஞ்சம் சுமார் என்றுதான் எழுத துவங்க வேண்டும். உண்மை என்பது எல்லா தடவையும் அங்கு விற்ற பாயசம் மற்றும் கம்பங்கூழும் போல சுவையாக இருக்காது என்பதால் இம்முறை புத்தகங்களை பற்றி எழுதி துவங்குவோம்.

சென்ற முறையை எனது அஜெண்டா - வரலாறு
இந்த முறை சிறுவர் சிறுமியர் சுற்றி இருந்தது.


தமிழ் கூறும் வாசிப்பு நல்லுலகில் அவர்களுக்கான இடம் என்பது அப்போது போலவே இப்போதும் ஒரு பெரும் வெற்றிடமாக உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய சிறுகதைகள் அதிலும் குறிப்பாக படக்கதைகள். எனது குழந்தைகள் லயன் / முத்து  காமிக்சின் டெக்ஸ் வில்லரையும், லக்கி லூக்கையும், கிட ஆர்டினையும் பிடித்து தொங்குவதை பார்த்தல் அந்த வருத்தம் இன்னும் பெரிதாகும்.  ஆங்கிலத்தில் Goodwords பதிப்பகம் இதில் ஒரு ஆறுதல்  
இந்த முறை ஒரு அழகிய மற்றம்
IFT பதிப்பகம் இரண்டு புத்தகங்களையும் ( கதிஜா(ரலி), பாத்திமா(ரலி) ) ரஹ்மத் பதிப்பகம் இரண்டு புத்தகங்களையும் ( மூஸா (அலை) ... ) ) அழகிய வடிவமைப்பில் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்  தரத்தில் வெளியிட்டு இருந்தன.



எனக்கொரு பேராசை ...
ஸஹாபாக்கள் முதல் தற்கால முஜத்திதுகள் வரை இஸ்லாமிய ஆளுமைகள் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக எளிய ( 40 பக்க அளவில் ) நூல்.
ஒரே series  தொடராக வெளியிடுவது.
100 ஆளுமைகள்.
100 புத்தகங்கள்.
படிக்கக்கூடிய எளிய ஃபாண்ட்,
எளிய வடிவமைப்பு.
முற்றிலும் சிறுவர் சிறுமியருக்கானது.
விலை ரூ.10. இன்னும் நூறு வருடமானாலும் அதே பத்து ரூபாய.

நன்றாக யோசித்துப் பார்த்தால் இன்றைய நிலையில் முஸ்லிம் இளையதலைமுறையினரிடையே வாசிப்பு பரவலாகவும், இஸ்லாம் அழகிய முறையில் உட்புகுந்து நிலைக்கவும் நாம் செய்ய வேண்டிய மிக சிறிய கிரவுண்ட் வொர்க் இது மாதிரிதான் இருக்க வேண்டும்