ஜமாஅத் தொழுகையில் தோளோடு தோள் சேர்த்து இனைந்து நிற்க வேண்டும். ஒருவருக்கொருவரிடையில் இடைவெளி இருந்தால் ஷைத்தான் இடையில் நுழைந்து மனங்களில் கோணலை ஏற்படுத்தி விடுவான் என்றெல்லாம் படித்துள்ளோம். நமது சகோதரர்கள் சிலர் குறிப்பாக இளவயது வாலிபர்கள் ஜமாஅத் தொழுகையில் கால்களை நன்றாக விரித்து வைக்கிறார்கள். இதனால் நாம் தனியாக நின்று தொழுவதை போன்ற உணர்வுடனே தொழ வேண்டியுள்ளது. இளைஞர்கள் இப்படி என்றால், சில பெரியவர்கள் வேறு மாதிரி..! என்னதான் இணைந்து நின்றாலும் தனித்தீவாக ஒடுங்கி நின்று தொழுவார்கள். அவர்களுடனும் சேர்ந்து நிற்க முடிவதில்லை.
ஒரு ஜமாஅத் தொழுகையில் இந்த புறம் ஒரு இளைஞர் அந்த புறம் ஒரு வயதான பெரியவர் என்று அமைந்து விட்டால் நமது நிலை அதோகதிதான். தொழுகையில் துவக்கத்தில் மகா கணம் பொருந்திய இளைஞனானவர் சுமார் இரண்டு மீட்டர் அகலத்தில் கால்களை விரித்து வைத்து கொள்வார். தோளை இணைத்துக்கொள்ளலாம் என்றால் அது எங்கேயோ தூர தேசத்தில் இருக்கும். இந்த புறம் பெரியவர். இது ஏன் ஏரியா உள்ள வராதே என்பது போல் நம்மை விட்டு ரொம்ப தள்ளி நின்று மிகவும் சாலிஹாக தொழ துவங்கி இருப்பார். இவர்களுக்கு நடுவில் ''இம்மாம் பெரிய உலகத்தில் இதெல்லாம் சகஜம்' என்ற மோன கதி அடையபெற்று நாம் நமது பெரிய ஸ்பேசில் தோழா துவங்குவோம்.
பேஸ் 2 : இரண்டாவது ரக்அத்தில் கால்களை இளைஞர் விரிப்பது ரொம்பவே குறைந்து ஒரு பார்முக்கு வந்து விடுவார். ஜனாப் பெரியவர் அவர்களும் இன்னும் ஒடுங்கி குறுகி தள்ளி போய் விடுவார். நமது நிலைதான் பரிதாபம். வனாந்தரத்தில் தனியாக நிற்பது போல் இருவரை விட்டும் தலா இரண்டு பர்லாங் தூரம் தள்ளி ஒரு புள்ளியாக தொழுது கொண்டிருப்போம். இடையிடையில் நிலையில் நிற்கும்போது முட்டு கைகளை சற்று விரித்து இருவரையும் தொட்டு ஒரு ஷரியத் திருப்தி பெற முயற்சி செய்தாலும் ஹ்ம்ம் இரண்டு பேரும் மஷ்ரிகைன் மக்ரிபைன் தான்.
இந்த இரு வகையினரின் தொழுகைகளை பார்த்தால் நமக்காக துவா செய்ய சொல்லி கேட்க முடியுமே தவிர குறை சொல்லவெல்லாம் தோன்றாது என்பதுதான் இங்கே சுவாரஸ்யமே!
'இவரு பெரிய அப்பாடக்கர் ' பார்வைக்கு பயந்து அவர்களிடம் பேசவும் தயக்கமாக இருக்கும். அப்பாபள்ளி ஜும்ஆவில் ஒருமுறை சகோ. நிஜாம் அறிவித்து இந்த கால்விரிப்பு கலாச்சாரம் கொஞ்சம் குறைத்தார். பிறகு மீண்டும் வேதாளம்.
இதில் உள்ள கொள்கை குழப்படிகளுக்கு நான் வரவில்லை. இதை படிக்கும் வாலிப வயோதிக அன்பர்கள் இனிமேல் உங்களால் இப்படிப்பட்ட குறுகுறுப்பு மற்றவர்களுக்கு ஏற்படாமல் காத்துகொண்டு தொழுது இறையருளை பெறுமாறும், ஆலிம்கள் / உலமாக்கள் இந்த விஷயத்தை ஒரு வரியாவது சொல்லி மக்களை நெறிபடுத்துமாரும் திருப்தியின்றி தொழுவோர் சங்கம் சார்பாக் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ரொம்ப நெருடலா தொழ வேண்டியதாக இருக்கு. கொஞ்சம் பார்த்து செய்யுங்க!!
No comments:
Post a Comment