Saturday, 8 May 2010
மீராப்பள்ளி.
புதிய பொலிவுடன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
புத்தம் புதிதாக கட்டப்பப்ட்டுள்ள நமதூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் ஆயிரத்தி ஐந்நூறு (1492) பெண் பிள்ளைகள் படிக்கிறார்கள். நாம் சென்று பார்த்த போது சிறு பிள்ளைகளிடம் புதிய பள்ளி வளாகத்தில் புழங்கும் மகிழ்ச்சி தெரிந்தது. விசாலமான புதிய வகுப்பறைகள், வராந்தாக்கள் .... இட நெருக்கடி மிகுந்த பழைய வண்டிக்கார தெரு பள்ளிக்கூடத்திற்கு இது எவ்வளவோ தேவலாம்.
பொலிவான முன்புற தோற்றம்
மொத்தம் உள்ள இருபத்து எட்டு செகஷன்களில் பதினாறு ரூம்கள்தான் புதிய கட்டிடத்தில். மீதி எல்லாம் கொஞ்சம்
சரியற்ற பழைய கட்டிடங்கள். அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டே ஆக வேண்டிய நிலைதான். குறிப்பாக முன்னாள் கம்ப்யூட்டர் கட்டிடம்.
ஆங்கில வழி வகுப்புக்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களாவது தற்போது தேவை.
இத்தனை மாணவிகள் எண்ணிக்கை உள்ள பள்ளிக்கு முறையான ஒரு நூலகம் இல்லை என்பது இன்னொரு அவலம். இதை போக்க பள்ளியின் முதல்வர் ஒரு புதிய முறையை கையாளுகிறார். அதாவது, பிறந்தநாள் என்றோ விசேஷம் என்றோ லீவ் கேட்டு வரும் பிள்ளைகளிடம் அவர்களாகவே முன்வந்து சில நூல்களே பள்ளிக்கு அன்பளிப்பாக தருவதற்கு அன்பாக ஊக்கமளிக்கிறார். இப்படி சேகரிக்கப்படும் புத்தகங்கள் வகுப்பு தோரும் சுற்றுக்கு விடப்படுகின்றன.
நல்ல யோசனைதான்.
இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வகுப்புக்கும் தலா ஒரு டிக்ஷனரி தற்போது உள்ளது.
பள்ளிக்கு முறையான பரிசோதனை கூடம் உள்ளது. உபகரணங்களில் கொஞ்சம் தன்னிறைவு தேவை.
குட்டிச்சுவர்
சீர் படுத்தப்படவேண்டிய கழிவறை
மொத்தம் ஆயிரத்தி ஐந்நூறு பிள்ளைகளுக்கு பத்து யுரினல்களும், இரண்டு கழிவறைகளும்தான் உள்ளன. (ஆசிரியர்களுக்கும் சேர்த்து). மேலும் கழிவறை பக்கமுள்ள மிக குட்டியான சுவர் ஒன்று (முன்னால் பள்ளி இருந்தபோது மாணவர்கள் ஏறி குதித்து முத்தைய முதலி தெரு வழியாக எஸ்கேப் ஆக வசதியாக இருந்த சுவர்) அபாய எச்சரிக்கை ஒலித்தவாறு கிடக்கிறது. வெளியார்களின் அத்துமீறல் தவிர்க்கப்பட, கண்டிப்பாக அந்த குட்டி சுவர் உயர்த்தபட்டே ஆகவேண்டும். (பார்க்க: படங்கள்)
ஊரில் இத்தனை ஆங்கில பள்ளிகள் இருந்தும் தங்கள் பெண் பிள்ளைகளை நமது தாய்மார்கள் இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு பொருளாதாரம் மட்டும் காரணம் இல்லை. பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஒழுங்குகளும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
பள்ளி செயல்பட துவங்குவதற்கு முன்னாள் பள்ளியின் இரு புறத்திலும் வாடகை வாகனங்கள் நிறுத்தி வைத்து இருந்தார்கள். இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் நெருக்குதலின் பேரில் அவை போலீசாரால் அப்புறபடுத்தப்பட்டன . ஆனாலும் தற்போதும் சில வாகனங்கள் அவ்வப்போது அங்கு ஸ்டாண்ட் அமைத்து நின்று வருகின்றன. (பார்க்க: படங்கள்).
மேலும் தேவையே இல்லாமல் அங்கு சுற்றி வரும் ஊர்குருவிகளுக்கு தடுப்பு வலை போட (பெண்) போலீஸ் காவல் அவ்வப்போது அந்த இடத்தில் தேவை என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு. நிறைவேறுமா?
பள்ளியின் முன்புறம் தனியார் வாகன நிறுத்தம்
பிள்ளைகள் அனைவரும் - குறிப்பாக கல்வியில் பின்தங்கிய சமுதாயமாக பார்க்கப்படும் முஸ்லீம் பெண் பிள்ளைகள் - படிப்பில் முத்துக்களாக ஜொலிக்கிறார்கள் என்று தனது மாணவர்களை மெச்சிக்கொள்ளும் முதல்வர், அவர்களை படிப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக ஊர் பொது மக்கள் சார்பாக பரிசுகள் எதுவும் பெரிதாக வழங்கபடுவது இல்லை என்ற தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார்.
இது விஷயத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் முயற்சிகளை வெகுவாக பாராட்டிய பள்ளி முதல்வர், பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் இந்த பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வேலைகளில் இருந்து திறப்பு விழா முதற்கொண்டு அனைத்து வகையிலும் சிரமம் பார்க்காமல் ஒத்துழைத்த விதத்தினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
ஆனால் அரசு மட்டும் இது போன்ற பெரும் காரியங்களில் முழுமை செய்ய முடியாது தான். நன்றாக படிக்கும் , விளையாட்டில் , கலையில் , போட்டிகளில் சிறப்பாக செயல்படும் மாணவிகளுக்கு பல ஊர்களில் இருப்பது போல அறக்கட்டளை அமைத்து வருடா வருடம் அவர்களுக்கு ஊக்கப்படுத்தி சிறப்பிக்கலாமே. இது போன்ற எண்டோவ்மேன்ட்கள் (endowments) இது வரை ஊரில் ஒன்று கூட இல்லை என்பது வேதனைகுரிய விஷயம்தான்.
ஊரில் உள்ள பெரும் தனவந்தர்கள் அவர்கள் பெயராலோ அல்லது அவர்களின் முன்னோர் பெயராலோவாவது ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி இது போல் உதவலாமே?
இந்த செய்தியை படிப்பவர்கள் பிரயோஜனமாக எதையேனும் செய்தால் அல்லது யாரிடமாவது சொல்லி நல்லது செய்ய தூண்டினால் புண்ணியம். செய்வோமா?
ஆக்கம் : ஹமீது மரைக்காயர் - ஜெனிபாஹ்
பேட்டையில் பெய்தது மாமழை
மரித்துப்போன மனங்களை தனது அருளால் உயிர்ப்பிக்கும் மகத்தான கொடையாளனாகிய அல்லாஹ், வறண்டு போய் இறந்து விட்ட பூமியை செழிப்படைய செய்ய தனது கருணை மழையை இறக்குகிறான். வெக்கையான இரவுகளையும், வெளியே தலை காட்ட முடியாத வெயில் பகல்களையும் அனுபவித்து கொண்டிருந்த பரங்கிபேட்டை மாமக்களுக்கு ஒரு இனிய நற்செய்தியாக இன்று காலை சுமார் அரை மணி நேரம் பொழிந்து தள்ளிய மாமழை மிகப்பெரும் ஆறுதலாக அமைந்தது.
நேற்று கூட லேசாக இங்கும் அங்குமாக தூறல்கள் விழுந்தது. ஆனால், இரவில் அது புழுக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது பெய்த மழையினால் பொங்கிய நீர் பெய்து முடித்த சில மணித்துளிகளிலேயே காய்ந்து போய் தெருக்கள் மீண்டும் வறட்சியாக காணப்பட்டது இந்த கோடையின் கொடுமையை உணர வைத்தது.
மழை காமெடி
ஆனால் இன்று பத்திரிக்கைகளில் செய்தி புயல் அபாயம் நீங்கியது அடை மழை பயம் இலலை. இந்த செய்திக்காகவே காத்திருந்ததுபோல் இன்று காலை பிடித்த மழை மதியம் வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதில் நாம் கற்றுக்கொள்ள பாடம் ஒன்று இருக்கிறது - என்னதான் விளக்கமாக ரமணன் சார் சொன்னாலும் ஆண்டவன் நெனச்சாதான் மழை பெய்யும். (இதை அவரும் மறுக்க மாட்டார்)
மரண சிந்தனை
நிச்சயமின்மை எனும் போர்வை நம் மீதும், நாம் டீல் பண்ணும் அனைத்து விஷயங்கள் மீதும் எப்போதும் படிந்துள்ளதை ஜனாசா தொழுகைக்கு வருகையில் (லாவது) கவனிக்க முடிந்தது.
மரணம் எனும் மாபெரும் நிதர்சனம் முகத்தில் அறையும் போது, சகலமும் அர்த்தமற்று போய்விடுகின்றன. நமது ஈகோக்கள், அபிலாஷைகள், ஏமாற்றங்கள், சூழ்ச்சிகள், உறவுகள், நல்லவை, கெட்டவை அனைத்தும் நம்மை பார்த்து கேலியாக சிரிக்கின்றன.
ஆடிக்கொண்டு இருக்கும் ஆட்டத்தில் நாமே இல்லாமல் போய் விட்ட பிறகு நமக்கு மிஞ்சுவது என்ன என்ற கேள்வியின் கணம் எப்போதும் தாங்க முடியாததாக இருக்கிறது.
சில பத்து வருடங்களின் வினைகளை பல ஆயிரக்கணக்கான வருடங்கள் வெம்மையில் காத்திருக்கிறது படைப்பாளனிடம் பதிலாக சொல்லி ஆகவேண்டும் என்ற உண்மை உரைப்பதற்க்காவது இந்த ஜனாசா தொழுகை எனக்கு பயன்படட்டும்.
அனைவரும் சுவைத்தே ஆக வேண்டும் என்று இறைவன் குறிப்பிடும் அந்த மெகா உண்மையின் வீரியம் (புரிந்தும்) புரியாமல் நமது கனவுகளில் புதைந்துக்கொண்டு நாம்....
(வாழும்போது நல்லவிதமாகவே வாழ்ந்து இன்று இல்லாமல் போய் விட்ட அனைவருக்காகவும், நமக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.)
பரங்கிப்பேட்டையில் கிக் பாக்ஸிங் பயிற்சி வகுப்புக்கள்
மெய்ப்பட்டு வரும் கனவு
வெள்ளாற்றைமுற்றிலுமாக தடுத்து மண் பாலம் கட்டப்பட்டு அதில் ஆங்காங்கே பில்லர் எழுப்பப்பட்டு வருகிறது. நாம் நடந்தே அக்கரை வரை சென்றதை முதலில் நம்பவே முடியவில்லை. ஏராளமான வெளி மாநில வேலையாட்க்களும், பிரம்மாண்டமான இயந்திரங்களும், அவைகளின் அசத்தலான இயக்கமும் அங்கு வரும் சிறு பிள்ளைகளை விழி விரிய காண வைக்கின்றன.
நமதூர் பக்கமிருந்து தான் கட்டுமான பொருட்க்கள் வரவேண்டும் என்பதனால் அக்கரை பக்கம் முதலில் பில்லர் போடப்பட்டு வருகிறது. அவை போடப்பட்டு முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நீர் போக்கு திறந்து விடப்படும். முழு கட்டுமானப்பணியும் முடிவடைய இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று அங்கு இருந்த கட்டுமான பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். ஹ்ம்ம்ம்ம்பார்க்கலாம்.
இந்த தற்காலிக மண் பாலத்தையும் அதன் மேல் வெகு மும்முரமாக இரவும் பகலும் நடைபெரும் வேலைகளையும் "பார்வையிட" திருவாளர் பரங்கிப்பேட்டை பொது ஜனம் குறிப்பாக தாய்மார்கள் தினமும் வருகை புரிவதுவாடிக்கையாகிவிட்டது.
aஇப்போதும் தோணியில் வந்து இறங்கும் மக்களை காணும் போது, இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான் என்று தோன்றியது.
பாலங்கள் இரண்டு
இந்த படத்திற்கு விளக்கம் தேவை இல்லை என்று முன்பு ஒரு பத்தரிகையில் தொடர் கார்டூன் வரும். நாம் ரசிப்போம். அப்படி ஒரு தலைப்பு சூட்ட பொருத்தமான இந்த படங்கள் நமது ரசிப்பிற்கு அல்ல.
சற்று உற்றுப்பார்த்தால் அருவருப்பான, தேசதுரோக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆணவம் மற்றும் மக்களின் மீதான அலட்சியப்போக்கு மெகா சைஸில் தெரியும். தெரிகிறதா?
பாலம் இரண்டு
மாறி வரும் பரங்கிப்பேட்டை அடையாளங்கள் - II
வீடுகளில் வெயிலை பாய்ச்சும் விசாலமான, கம்பிகள் வேய்ந்த முற்றங்கள் வெயிலை மட்டுமல்ல, மழைநாட்களில் மழைத்தண்ணீரை தேக்கி (வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரங்களில்) மினி நீச்சல் குளங்களாகவே ஆகிவிடும். இரவுகளில் முற்றங்கள் வழியே விடியவிடிய வழிந்தோடும் நிலவொளியை பிடித்துவைத்து என்ன செய்யலாம் என்றெல்லாம் கிறங்க வைத்த முற்றவெளிகள் இன்று "கல்யாணகூட"ங்களாய் சுருங்கி இருக்கிறது. அகண்ட தாழ்வாரங்கள் கல்லா மண்னா விளையாட்டுக்கும், வீட்டு விசேஷங்களின் போது இரவு நேர வெட்டிப்பேச்சுகளுக்கும் ஒரு அற்புத களம்.
அறைகள்.. எத்தனை பெரிய குடும்பத்தையும் இதமாக அரவணைத்துக்கொள்ளும் அன்பு கொண்டவை. திருமணம் மற்றும் விசே காலங்களில் இந்த இல்லங்கள் ஒரு மினி ஷாதி மஹாலேதான். அக்காலங்களில், பவுமானமும் (தமிழ் வார்த்தைதான்) பவுசும் பெருக வளைய வரும் உறவுகளால் ஏற்படும் மகிழ்வுகள் என்றும் மறக்க இயலாதவை. இரவுகளும் பகல்களாக தோன்றவைக்கும் இல்லங்கள் அவை.. பாட்டனின் அதிகாரம் தரும் மரியாதை கலந்த பயம், பாட்டியின் நிபந்தனைகளற்ற பரிவு, சிற்றப்பா/பெரியப்பாமார்களின் கண்டிப்பு, சிறிய/பெரிய அன்னைகளின் பிரியம், சகலைகளின் பனிப்போர், Centralisation of Finance, Decentralisation of Affection, பஸ்டாண்ட் பக்கம் உன்னை அதிகமா பார்க்குறேனே.. என்ற மாமாவின் கவனிப்பு ஏற்படுத்தும் நல்மாற்றங்கள், சாதாரண அறிவுகளைகூட தங்கைகளுக்கு விளக்கும் மைனிகள்..... என்று கூட்டுக்குடும்பத்தின் சகல விழுமியங்களும் கொண்ட அகராதிகள் இந்த இல்லங்களிலிருந்துதான் கட்டியயழுப்பப்பட்டன. " உலகத்தில் எனக்கு சொந்தம் மூன்றே பேர்தான் " என்ற தனிக்குடித்தன தனிமை அவலம் இந்த இல்லங்களில் இல்லாதிருந்தது. இரண்டு நாள் காய்ச்சலில் படுத்தால், கதை பேசியே கவலை போக்க ஒரு உறவுக்கூட்டத்தையே வைத்திருந்த இல்லங்கள் அவை. தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்ப சொல்லும் மனவிசாலத்தனத்தை இந்த விசாலமான இல்லங்கள் கற்றுத்தந்தன.