Wednesday, 3 April 2024

ஏகாந்தம் இங்கே கிடைக்கும்

 ஏகாந்த தனிமைக்கு

அப்ரிதிக்கு குழப்பமாக இருந்தது ....

 அப்ரிதிக்கு குழப்பமாக இருந்தது .


இந்த பள்ளிவாசல்கள் வெளி ஸ்பீக்கர்கள் அலற விடும் விஷயத்தில்...  

என்னடா இது,
குரானிலும் எடுத்து காட்டியாயிற்று

ஹதீஸ்களிலும் எடுத்து காட்டியாயிற்று

சவூதி உலமாக்கள் ஃபத்வா, ஜமாஅத்துல் உலமா, தேவ்பந்த் ஃபத்வா என்று அனைத்தும் சொல்லி பேசியாயிற்று.

கிட்டத்தட்ட ஊரின் அனைத்து உலமாக்களும் மதனியும் கொள்கை வேறுபாடில்லாமல் வெளி ஸ்பீக்கர் தவறு என்று சொல்லிவிட்டார்கள்.

இவர்கள் வக்த் தொழுகைக்கு வெளி ஸ்பீக்கர் ஒலிபரப்பை நிறுத்துவார்கள் என்று பார்த்தால் தராவிஹ்கிற்கு ரெண்டு கீர் போட்டு தூக்கி கடைசியில் நள்ளிரவு 2 மணி தொழுகைக்கும் இப்படி ஐந்தாவது கீரில் அலற விடுவதுதான் அப்ரிதிக்கு குழப்பம் அதிகமாக காரணம்..

என்ன தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ?
 
ஒருவேளை இந்த கிராஅத் இனிமையில் மயங்கி சுத்துப்பட்டு அனைத்து காபிர்களும் ஓடோடி வந்து கலிமா சொல்லி விழுந்து  புரண்டு அழுவார்கள் என்றா ?
அல்லது
 
அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள சிறுகுழந்தைகள் வயதான முதியோர்கள் அனைவரும் அதை கேட்டு கண்ணீர் விட்டு ஏங்குவார்கள் என்றா ?
அல்லது

எப்படியாவது இந்த வோர்ல்டை தாண்டி கேலக்சியை தாண்டி சித்ரத்துல் முன்தஹாவை தட்டி ஜொலிக்க செய்திடவேண்டும் அர்ஷையும் அடைந்திட வேண்டும் இந்த குரல்கள் என்றா ?

அப்ரிதிக்கு  உண்மையிலேயே புரியவில்லை;   குழப்பமாக இருந்தது .

சரி பதிலுக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால்
எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கா  என்று கேட்பவர்கள்,  இன்று .. போதுமானதற்கு மேல் ஆதாரங்கள் கொடுத்தும்
ஷைத்தான் அதை கேட்டு ஓடிவிடுவான், ஒளி பரவும்  என்றெல்லாம் எந்த ஆதாரமில்லாததை சொல்கிறார்கள்.

ஸ்பீக்கரில் குரானை கேட்டு ஷைத்தான் ஓடிவிடுவான் என்றால் தெருவுக்கு 4 ஸ்பீக்கரை கட்டி 24X 7 ஓத  விடலாமே. 
இதற்கு என்ன ஆதாரம்.?
ஒளி பரவும் எனபதும் இதே வகையறா தான்.!!!

தொழுகையில் ஓதப்படுவது பள்ளிவாசலில்  தொழுவதற்கு வந்து வரிசையில் நிற்பவர்களுக்கா அல்லது அண்ட சராசரத்தில் அனைவருக்குமா ? .

சரி
இதுதான் புரியவில்லை என்றால் இன்னொரு கூத்து அதைவிட குழப்பமாக இருந்தது அப்ரிதிக்கு...

 ஜும்ஆ என்பது ஒரே பள்ளிவாசலில் (மீராப்பள்ளி) இருந்தது என்று கேள்விப்பட்டுள்ளேன். அப்புறம் இடமின்மை, கொள்கை காரணங்கள் சொல்லிக்கொண்டு சில பள்ளிகள் பிரிந்து சென்று ஜுமுஆ தொழ துவங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறகு கோவிட் காலத்தில் வேறு வழியில்லாமல் அணைத்து பள்ளிகளிலும் ஜும்மா தொழப்பட்டது   .

ஆனால் பெருநாள் தொழுகை என்பது ஊர்வாசிகள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடுவதற்கான தொழுகை. இந்த வருடம் ஈத் ( பெருநாள் ) தொழுகை கிட்டத்தட்ட அனைத்து சிறிய பெரிய பள்ளிகளிலும் தொழப்பட்டது எந்த வகையிலும் லாஜிக் புரியவில்லை.

இடமின்மையா ?
நபி வழி தொழுகை என்றா ?
தன் பள்ளி என்ற பெருமைக்கா?
வசூல் காரணமா?
இல்லை இன்னும் கோவிட வழிகாட்டுதல்கள் மூளைக்குள் சுற்றி சுற்றி வருகிறதா ?
பள்ளியை விளம்பரப்படுத்தும் அதன் மூலம் தனக்கு விளம்பரம் தேடும் அற்ப முயற்சியா ?

எதுவும் புரியவில்லை
 
சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஊரின் பெருநாட்களில் அனைத்து பள்ளிவாசல்களில் இருந்தும் வெண்ணுடை அணிந்த முஸ்லிம்கள் அணியணியாக திரண்டு தக்பீர் தஹ்மீத் சொல்லியவாரே மீராப்பள்ளியை நோக்கி வருவார்கள். 
நூற்றுக்கணக்கில் நமதூர் வாசிகள் அவ்வாறு திரண்டு வரும் காட்சி கண்கொள்ளா மகோன்னத காட்சியாக இருக்கும் என்றெல்லாம்  வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள். அதெல்லாம் வெறும் கனவாகவே போய்விடுமோ ??....

முஹல்லா தோறும் ஜும்மா
முஹல்லா தோறும் பெருநாள் தொழுகை
அடுத்து முஹல்லா ஐக்கிய ஜமாஅத்
அடுத்து முஹல்லா விற்கென தனி தப்தர் ....

என்று இதன் நீட்சிக்கான சாத்தியக்கூறுகளை யோசித்து பார்த்தால் இன்னும் குழப்பம் அதிகரித்தது அப்ரிதிக்கு

தன்னை ஒரு சிவிலைஸ்ட் சொசைட்டி என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சமுதாயம் செய்யக்கூடிய காரியங்கள் இதுவா என்ற கேள்வி மனதிற்குள் பெரிதாகியது..

இனிமேலாவது தனி தனி பெருநாள் தொழுகைகளை தவிர்த்துவிட்டு முடிந்தளவு ஒரே பள்ளியில் மக்கள் தொழ வருவார்களா என்ற ஆர்வமும் விடை தெரியாத குழப்பமும் சூழ அப்ரிதி ஒரு காகிதத்தை எடுத்து கொண்டு அமர்ந்தான் ...

எழுத ஆரம்பித்தான்


...
..அப்ரிதிக்கு குழப்பமாக இருந்தது ....

இருப்பிட சிக்கல் - யாருக்கு ? உங்களுக்குத்தான் சார்

 இருப்பிட சிக்கல் என்பது எங்கோ பாலஸ்தீன மக்களுக்கு காஷ்மீர் மக்களுக்கு என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தோம்.


மேவாட் பிராந்திய, நூஹ் மாநில  மக்களுக்கு வந்து தற்போது நமக்கு வந்து நிற்கிறது.

இங்கே எதிரி இந்துத்துவாதிகள் அல்ல IL &FS பவர் பிளான்ட்

நமது ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலம் நீர் காற்று ஆகியவை கடுமையாக மாசு அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

நமது அருகாமை கிராமத்து மண்ணில் அதாவது நம் மண்ணில் போரோன் எனும் ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட முப்பது மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

விவசாயம் செய்வதற்கு தகுதியற்ற நிலமாக நமது நிலங்கள் மாறிவிட்டதாக அந்த அறிக்கை சொல்கிறது.

நெய்வேலிக்கு அருகில் உள்ள நிலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவீடு 250 மடங்கு மெர்க்குரி (பாதரசம்) இருப்பதாக ஆய்வு சொல்கிறது.

நெய்வேலி எங்கோ 2500 கிலோமீட்டர் தொலைவில் இல்லை. 25 கிலோ மீட்டர் தான்.

ஏற்கனவே நெய்வேலி பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதால் நமது கடலூர் மாவட்டமே மிகப்பெரும் அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒத்துக் கொண்டிருந்தார்.

தற்போது IL & FS பவர் பிளான்ட் ஒரு பகாசுர அரக்கனாக நம்முன் நிற்கிறது.


உடன் இணைக்க பட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையை பார்வையிடுங்கள்.


பொதுவாக நிலக்கரியை எரிப்பதால் எழும் சாம்பல் (பிளைஆஷ்) தான் ஆபத்து என்பார்கள்,  அது மட்டும் ஆபத்து அல்ல.
நிலக்கரியை எரிப்பதால் கார்பன, மெர்க்குரி, சல்பர்,  முதலிய ரசாயனங்கள் பெருமளவில் வெளிப்பட்டு காற்றையும் நிலத்தையும் நீரையும் நிலத்தடி நீரையும் கடுமையாக பாதிக்கும்.

காரணங்களே தெரியாமல் நாம் அனுபவிக்கும் சுவாசப் பிரச்சினைகள், சிறுநீரக கோளாறுகள், தோல் நோய்கள் இவற்றிற்கு மூல காரணமாக பவர் பிளான்ட் இருக்கலாம்..

 பவர் பிளான்ட்டை சுற்றி 25 கிமீ இடத்தில் உள்ள ப்ளோரா பவுனா என்று சொல்லப்படும் செடி கொடி மரங்களையும் சாம்பல் படிந்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்தொழிக்கும்.

கடந்த காலங்களில் உலகெங்கும் இயங்கிய பவர் பிளான்டுகள் பற்றிய ஆய்வறிக்கைகள் சொல்வது இதைத்தான்.

வாழத் தகுதியற்ற இடமாக கடலூர் ஆகிவிட்டது என்று எங்கோ செவ்வாய் கிரகத்தில் கடலூர் இருப்பதாக நினைத்து பேசி வந்தோம்.
தற்போது நமது ஊரே பத்திரிகை செய்திகளில் முதன்மை இடாத்தில் வரத்துவங்கியுள்ளது

பெரும் போராட்டங்கள் அல்ல ஒரு முணுமுணுப்பு கூட இல்லை
இப்படி ஒரு அழிவு சக்தி வருகிறது என்று கூட தெரியாமலே அமைதியாக இருந்து விட்டோம்.

இப்போது நம் வாழ்வியலுக்கு பெரும் சிக்கலாக வந்து நிற்கும் இதை நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் ?
என்னதான் செய்யப் போகிறோம்?

குர்ஆன் அகாடமி

 குர்ஆன் அகாடமி


நம்மை படைத்த நம்முடைய இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு விட்டன.

நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள்.

வஹியின் வாசலும் மூடப்பட்டு விட்டது.

இப்போது நமக்கும் இறைவனுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு அவனுடைய வார்த்தைகளான இறைவேதம் குர்ஆன் மட்டும் தான்.

தொழுகை என்பது வலுவுடன் கட்டாயமாக்கப்பட்டதும் பள்ளிவாசல்களில் கண்டிப்பாக வந்து தொழ வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டதற்கு  குர்ஆன் எனும் இறைவனின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தப்படுவதற்காக என்பது ஒரு முக்கியமான காரணம்.

குர்ஆன் ஓதப்படும் போது வேறு எதையும் நாம் செய்யக்கூடாது, செவி தாழ்த்தி கேட்க மட்டும்தான் செய்ய வேண்டும் என்று குர்ஆன் சொல்வதற்கும்

போதையோடு இருக்கும் நிலையில் தொழாதீர்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிய வேண்டும் என்று குர்ஆன் எச்சரிப்பதற்கும்

பின்னணியில் உள்ள காரணங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

இந்த உம்மத்தின் மீது படிந்திருக்கும் ஏராளமான பித்னாக்களில் தலையாய பித்னாவாக குர்ஆனிலிருந்து இந்த உம்மத் விலகி நிற்பது, குர்ஆனோடு தொடர்பில்லாமல் இருப்பது என்பதை சொல்லலாம்.

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன்
ஒன்று இறைவனின் வேதமாகிய குரான் இரண்டாவது எனது குடும்பத்தினர் அஹ்லே பைத்,
 என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது..

குர்ஆனை ஓதுவதில் உள்ள நன்மையை உணர்ந்து நியமமாக ஓதி வரும் நாம், அதன் உள்ளர்த்தத்தை, அது நமக்கு எடுக்க விரும்பும் பாடத்தை படிக்க மறந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

இஸ்லாத்தின் கடும் எதிரியாக விளங்கிய உமர் ரலி அவர்கள் குர்ஆனின் சில வரிகளை படித்தவுடன் அவர்களை தலைகீழாக மாற்றிய அந்த அற்புத சக்தி இன்று நம்மிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதன் பொருள் தான் என்ன?

மாபெரும் சாம்ராஜ்யங்களை ஈர்க்குச்சி போன்ற வாட்களை கொண்டு வீழ்த்திய அந்த உன்னத மனிதர்களிடம் குரானை தவிர வேறு எந்த ஆயுதங்கள் இருந்தது?

வெள்ளையர்கள் இஸ்லாமிய உலகினை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முயன்ற போது,  அவர்கள் செய்துவற்றில் மிக மிக முக்கியமானது குர்ஆனை இந்த உம்மத்தில் இருந்து விலக்கியது அல்ல,  அது முடியாது என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தந்திரமாக குர்ஆனிய மொழியை நம்மிடம் இருந்து நீக்கி அதற்கு ஆங்கிலத்தை ஒரு மாற்றாக பிரதியிட்டார்கள்.

 குர்ஆனை ஓதுவது மட்டுமே மிகப்பெரும் நன்மை என்று நம்மை திசை திருப்பினார்கள்.

 இதுவே அவர்களின் பெரும் வெற்றியாகவும் இந்த உம்மத்தின் மிகப்பெரும் சோதனையின் ஆரம்பமாகவும் அமைந்து விட்டது.


ஆக,
இந்த பித்னாவிலிருந்து இருந்து மீண்டு எழுவது எப்படி?

குர்ஆனிய அரபியை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

குர்ஆன் ஓதும் போது அது நமக்கு வார்த்தை வார்த்தையாக புரிய வேண்டும்.

 தொழுகையில் குர்ஆன் ஓதப்படும் போது அதன் பொருள் உணர்ந்து நாம் அழுது கரைய வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், குர்ஆனை பொருள் அறிந்து ஓதுவதற்கு,
 குர்ஆனிய அரபிக் மொழியை கற்றுக்கொள்வதற்கு ஒரு எளிய தளமாக குர்ஆன் அகாடமி துவங்கப்படுகிறது.

மிக எளிமையான
மிக சுருக்கமான
மிக சுவாரசியமான வகுப்புகளாக அமைவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

நாளை நம் அதிபதின் முன்
அவன் வழங்கிய வேதத்தை  நாம் எப்படி கையாண்டோம் அதனுடன் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று நல்ல முறையில் பதில் சொல்வதற்கு இது ஒரு வழியாக அமையும் என்று
 நம்பிக்கை வைப்போம்.

இந்த முயற்சிக்கு அல்லாஹ்  அருள் புரிந்தவர்களை தவிர வேறு யார்தான் கைகோர்த்து நிற்பார்கள்... ஒத்துழைப்பார்கள்..

கஜா புயலுக்கு பின் - சில படிப்பினைகள்

 கஜா புயல் வீசிய  சில வாரங்களுக்கு பின் அதிராம்பட்டினம் சகோதரர் ஒருவரிடம் பேசினேன் அதற்கு பிறகு என் மனதில் எழுந்த எண்ணங்கள் இவை : 


அதிராம்பட்டினம் என்றோர் முஸ்லீம் ஊர். மிகப்பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் வாழும் ஊர். என்னதான் பாலைவன எண்ணெய் சம்பளம் ஈர்த்தாலும், காலம் காலமாக அவர்கள் கைக்கொண்டுவந்த அடிப்படை வியாபாரங்களையும் அந்த பகுதியின் சமூக மேலாண்மையையும் அவர்கள் விட்டுத்தரவேயில்லை. ஊரைசுற்றியுள்ள தென்னை தோப்புக்கள் கிட்டத்தட்ட 90 %  மேல் அவர்களுடையதுதான். சுற்றுப்பட்டு கிராமங்களுக்கு அவர்கள்தான் சமூக பொருளாதார சார்பு மையம்.  பஞ்சாயத்து உள்ளிட்ட அதிகார மைய்யங்களும் அவர்களே.   

நம்மை கொஞ்சம் பார்ப்போம்... 
பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள நிலபுலன்கள் - சொல்லப்போனால் சிலபல கிராமங்களே முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்த காலங்கள் ரொம்ப பண்டைய காலமெல்லாம் அல்ல,  மிக சமீபத்தில் கூட இருந்தது.

நமக்கு சொந்தமான நிலங்களில் - நேரிடையாகவோ, குத்தகை விட்டோ - அரிசி முதல் அனைத்தையும் பயிர் செய்து வந்தோம்,  

கடல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த வணிகங்களில் 100, 150  வருடங்கள் முன்பு வரை நாம்தான் அவற்றை ஆண்டு வந்தோம். குறிப்பாக மீன், இறால் போன்ற கடல் உணவு சார்ந்த வணிகத்தில் - சில பத்து வருடங்கள் முன்பு வரை -  தனி முத்திரை பதித்து வந்தோம். அப்டீன்னா என்பவர்கள்  அன்னங்கோயில் சென்று பார்க்கவும். 

மாற்று மருத்துவம் என்று இப்போது சொல்லப்படும் மருத்துவ முறைகளிலும் குறிப்பாக முக்கிய மருத்துவமான யுனானி மருத்துவத்தில் நமதூர் கிட்டத்தட்ட மருத்துவ மையமாக திகழ்ந்தது. 

குடும்பம் குடும்பமாக செய்த துணிகளுக்கு சாயமிடுதல், சேமியா ஜவ்வரிசி போன்ற உணவு பதப்படுத்தல் .... என்று அன்றே பொருளீட்டலில் வெரைட்டி காட்டினோம்.

கால்நடை வளர்ப்பில், குறிப்பாக குதிரை வளர்ப்பு, ஆடு, மாடு கோழி  வளர்ப்பு இவற்றை வாழ்வியல் கலையின் ஊடாகவே செய்ய பழகி இருந்தோம். இறைச்சி வணிகத்தில் நாம் அன்றும் இன்றும் வேற லெவல் தான். 

சுருக்கமாக சொன்னால் நாம் காலம் காலமாக இந்த பூமியில் அழுத்தமாக கால் பதித்து வாழ்ந்து வந்தோம். இப்போது தரைக்கு மேல் சில நூறு அடிகள் மிதந்து வருகிறோம். வேர்களை மறந்து பிடிப்புக்கள் இழந்து...

நம்மை மிதக்க செய்த அரபு நாடுகளின் எண்ணெய் வாச மாயை  தற்போது மங்கத் துவங்கியுள்ளது. மீண்டும் வேர்களை பிடித்து செழிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.    

அதிராம்பட்டினத்து முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கும் சென்றார்கள்.. தங்கள் ஊரின் பாரம்பரிய அடையாளங்களையும் தக்கவைத்துக்கொண்டார்கள்.  வயல்வெளிகளில் வேளாண்மை நடந்தது; சுற்றியிருந்த கிராமங்களுக்கு வேலை வழங்கி வந்தார்கள். சமூக மற்றும் பொருளாதார மேலாண்மையை  தக்க வைத்துக்கொண்டார்கள். 

கஜா புயல் போல் ஒரு துயரம் நிகழும் போது அவர்கள் மீண்டும் தலை நிமிர ஒரு மாற்று இருந்தது; இருக்கிறது.

நம்மை ஜஸ்ட் லைக் தட் மிஸ் பண்ணிவிட்டு சென்ற ஒரு சுனாமியோ, தானே புயல் போலவோ  அல்லது வேறு எதுவுமோ நம்மை உருக்குலைத்தால், சமூக ரீதியாக நம்மை மீள்கட்டமைத்துக்கொள்ள அரபுநாடுகளில் நாம் உயிர் விட்டு சேர்த்த பொருளாதாரம் தவிர வேறு எதுவும் பிடிப்பில்லை நமக்கு. 

நமது முன்னோர்கள் கைக்கொண்ட பாரம்பரிய சமூக பொருளாதார வாழ்முறைகளை பற்றி சிந்திக்க நல்லதொரு சந்தர்ப்பம் இது.  

இந்த பதிவு நமது நல்லெண்ண சிந்தனைக்கு ...!

அன்புடன் 
ஹமீது மரைக்காயர். 

டூர் என்பது யாதெனில் (காயல்பட்டினம் விஸிட்)

 காயல்பட்டினம் சென்றிருந்தேன்.

என் நெடுநாள் கனவு.  

பரங்கிப்பேட்டைக்கும் காயலுக்குமான தொடர்பை செவி வழியாக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு இது ஒரு எதிர்பார்ப்பு பயணம்.

ஒரு நாள் பயணம்.

காயல் என்னை அவ்வளவாக ஏமாற்றவில்லை. ஆனால் பெரிதாக ஈர்த்துவிடவுமில்லை.

சில இடங்களில் 20 வருடத்திற்கு முந்தைய  பரங்கிப்பேட்டை தெரிகிறது. சில விஷயங்களில் லேட்டஸ்ட்.

தர்கா உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப பின்னாடியும்,
தெருவுக்கு தெரு மதரஸா, இஸ்லாமிய கல்விக்கூடங்களில் பரங்கிப்பேட்டை தொடமுடியா உயரத்திலும் இருக்கிறது.

அழகான வீடுகள், வீடுகளின் கட்டமைப்பு நேர்த்தியான but நெருக்கடியான ஒரு அமைவில் உள்ளது. (எனக்கெல்லாம் நாலு நாள் கூட தாங்காது ) ஆனால், தெருக்களுக்கு வராமலேயே மொத்த ஊரையும் முடுக்கின் மூலம் கடக்கும் பெண்களுக்கான பிரத்தியேக முறை அற்புதமானது. பிரமிக்க வைக்கிறது.
ஆனால் இப்போது 'எல்லோரும் எங்கேயும்' நிலை வந்துவிட்டது என்கிறார்கள்.

கிட்டத்தட்ட 60,000 மக்கள்  தொகை, 60 சொச்ச பள்ளிவாசல்கள், 20 முஸ்லிம் பள்ளிக்கூடங்கள்,  முஹல்லாதோறும் ஜமாஅத்கள், ஒன்றுபட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், ஏராளமான தரீக்கா மற்றும் கொள்கை பிரிவுகள்...
... டிப்பிக்கல் முஸ்லீம் ஊர்.

முன்பு வைரம் மற்றும் கற்கள் வணிகம். தற்போது....
யெஸ்..
வெளிநாட்டு சம்பாத்தியம்.
பக்கத்திலுள்ள கீழக்கரையை பணக்கார ஊர் என்கிறார்கள்.
பரங்கிப்பேட்டையை பற்றி அதிகமானோர்  தெரிந்திருக்கவில்லை.

ஊரைப்பற்றி அதன் பாரம்பரியம் பற்றியும் ஒரே ஒரு புத்தகம்தான் கிடைத்தது. (இதிலேயும் ஒற்றுமை!)

நான் சந்தித்த பல ஆளுமைகள் தங்களை அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் வழிவந்தவர்களாக சொல்லிக் கொள்கின்றனர். சிலர் நபி(ஸல்) அவர்கள் வழிவாராகவும், சிலர் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வழிவார் என்றும்.

பெண்கள் அதே நாணம், கண்ணியம். 
மிகச்சில கடலோர முஸ்லிம் கிராமங்களின் அடையாளமான வெள்ளை துப்பட்டி ஒன்று கூட பார்க்கமுடியவில்லை. . நிறைய புர்காக்கள்தான்.

தெருக்களின் பெயர்களில் ஒன்றில் (மட்டுமே) மரைக்காயர் என்று பார்க்க முடிந்தது... துப்பட்டி போன்று மரைக்காயரும் வழக்கொழிந்து போயுள்ளது. ஆனால் பற்பல குடும்ப பெயர்கள் புழக்கத்தில் உள்ளன.

காயல்பட்டினத்தின் ஊர் கட்டுப்பாடு காலம் காலமாக நமக்கு தெரிந்ததுதான். முஸ்லிம் குடியிருப்புக்களில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷன் கிடையாது       

வடகாயல், பழைய காயல் என்று இரண்டு உள்ளது. 
வரலாற்றில் கபாடபுரம் என்றும் அலைவாய் துறைமுகம் என்றும் காயல் என்றும் பற்பல இடங்களில் குறிப்பிடப்படுவது இன்றைய காயல்தான் என்கிறார்கள். 
ஊரின் சூழ உள்ள தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சூழலியல் சிக்கல்களை அனுபவிக்கும் விஷயத்தில் இவர்கள் நமக்கெல்லாம்  முன்னோர்கள்.

ரெயில் நிலையம் நமதூரைப் போன்றே ஊரிலிருந்து 4 கிமீ தள்ளி இருப்பது
  பயணிகள் நடைமேடை உயரம் குறைவு 
  ஒரேயொரு தண்டவாளம்  போன்றவை புன்னகைக்க வைக்கும் ஒற்றுமைகள்

attn  : சகோதரர் கலீல் அஹமது பாகவி அவர்கள்  .

வேன் பிடித்து போகத் தேவையில்லாத அழகான கடற்கரை. அயலார் எவரின் தொல்லைகளுமின்றி குடும்பம் குடும்பமாக பொழுது கழிக்க வருகின்றனர். பார்க்கவே நிறைவாக இருந்தது. ரமலான் மாத இரவுகளில் இன்னும் ஜெதபாக இருக்கும் என்கிறார்கள்,  .  

ஒரு நாள் பயணம் என்பதால் காயல்பட்டினம் பிரியாணி, தால்ச்சா பற்றி தெரியவில்லை. தம்மடை என்று ஒரு பனியாரம் (முட்டை பனியான் போல் உள்ளது) மட்டும் டேஸ்ட் பண்ணிபார்த்தோம்.

90s kids களுக்கு : பாக்கு முட்டாய், மிண்ட் முட்டாய், சக்கர முட்டாய் எல்லாம் கிடைக்கிறது.

காயல்பட்டினம் தான் காயல் என்ற ஒரு புத்தகம் பரிசளித்தார் டாக்டர் ஆர்.எஸ். அப்துல் லத்தீப் அவர்கள்.

எங்களுக்காக தம் பணியினையும் பாராமல் உடனிருந்த ஹாபிஸ்  ரஹமதுல்லாஹ் உஸ்தாத் அவர்களின்   தொடர்பில் 'தாவா சென்டர்' ஜக்கரியா நானா, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் அபுல் ஹசன் கலாமி (எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்)  எழுத்தாளர் சாலை பஷீர் போன்றோரை சந்திக்க முடிந்தது. அபுல் பரக்காத் அவர்களை சந்திக்க இயலவில்லை. 

எங்களுக்கு சிறப்பான காலை உணவை (பரோட்டா, இட்லி, பூரி, மட்டன், ஈரல், ... கலக்கல் டிபன்! ) அளித்த  ரஹமத்துல்லாஹ் உஸ்தாத், அவர்தம் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் அற்புதமான மதிய உணவு (அப்படியே பரங்கிப்பேட்டை கறி சுவை) அளித்த  பரங்கிப்பேட்டை சகோதரரின் ஹாபீழா மனைவியின் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தினையும் அருளையும் பொழிவானாக.

இதுபோல் இன்னும் ஒரு நாலு பக்கம்கூட  எழுதலாம். படிக்க ஆள் வேண்டுமே !!

முடிவாக,
என் நெடுநாள் சந்தேகம்.
காயல்பட்டினத்திலிருந்துதான் பரங்கிப்பேட்டைக்கு வந்து குடியேறினார்கள் என்று சொல்லப்படுவது குறித்து கிட்டத்தட்ட நான் சந்தித்த அனைத்து ஆளுமைகளிடமும் கேட்டேன்..
புத்தகம் எழுதிய பெரியவர் அப்துல் லத்தீப் அவர்கள் சொன்னது..
"சிம்பிள்!  உக்காஷா (ரலி) அவர்கள் உங்கள் ஊருக்கு வந்துள்ளார் அல்லவா? அப்போ உங்கள் ஊரில் முஸ்லிம்கள் வருகை கி.பி.640 கணக்கில் வருகிறது. நீங்கள் ஏன் எங்கிருந்தும் வரவேண்டும்?"

இது போன்ற 'காலம்'கள் '' நம்மை நாம் '' அறிந்துக்கொள்ள உதவும் என்று அடிப்படையில் எழுதப்படுகிறது.          

குறைந்த நேர பயணம் (10 மணி நேரம்) என்பதால் எனது அவதானிப்புக்கள் மற்றும் கணிப்புக்களில் தவறு இருக்கலாம். 
அறிந்தவர்கள் திருத்துங்கள். 
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

அன்புடன் 
ஹமீது மரைக்காயர்
மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை.

சென்னை புத்தக கண்காட்சி விஸிட்

 சென்னை புத்தக கண்காட்சி சென்றிருந்தேன்.


நியாயப்படி பார்த்தால் ஐஸ்கிரீமும், சேண்டவிச்சும் சென்ற தடவையை  விட கொஞ்சம் சுமார் என்றுதான் எழுத துவங்க வேண்டும். உண்மை என்பது எல்லா தடவையும் அங்கு விற்ற பாயசம் மற்றும் கம்பங்கூழும் போல சுவையாக இருக்காது என்பதால் இம்முறை புத்தகங்களை பற்றி எழுதி துவங்குவோம்.

சென்ற முறையை எனது அஜெண்டா - வரலாறு
இந்த முறை சிறுவர் சிறுமியர் சுற்றி இருந்தது.


தமிழ் கூறும் வாசிப்பு நல்லுலகில் அவர்களுக்கான இடம் என்பது அப்போது போலவே இப்போதும் ஒரு பெரும் வெற்றிடமாக உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய சிறுகதைகள் அதிலும் குறிப்பாக படக்கதைகள். எனது குழந்தைகள் லயன் / முத்து  காமிக்சின் டெக்ஸ் வில்லரையும், லக்கி லூக்கையும், கிட ஆர்டினையும் பிடித்து தொங்குவதை பார்த்தல் அந்த வருத்தம் இன்னும் பெரிதாகும்.  ஆங்கிலத்தில் Goodwords பதிப்பகம் இதில் ஒரு ஆறுதல்  
இந்த முறை ஒரு அழகிய மற்றம்
IFT பதிப்பகம் இரண்டு புத்தகங்களையும் ( கதிஜா(ரலி), பாத்திமா(ரலி) ) ரஹ்மத் பதிப்பகம் இரண்டு புத்தகங்களையும் ( மூஸா (அலை) ... ) ) அழகிய வடிவமைப்பில் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்  தரத்தில் வெளியிட்டு இருந்தன.



எனக்கொரு பேராசை ...
ஸஹாபாக்கள் முதல் தற்கால முஜத்திதுகள் வரை இஸ்லாமிய ஆளுமைகள் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக எளிய ( 40 பக்க அளவில் ) நூல்.
ஒரே series  தொடராக வெளியிடுவது.
100 ஆளுமைகள்.
100 புத்தகங்கள்.
படிக்கக்கூடிய எளிய ஃபாண்ட்,
எளிய வடிவமைப்பு.
முற்றிலும் சிறுவர் சிறுமியருக்கானது.
விலை ரூ.10. இன்னும் நூறு வருடமானாலும் அதே பத்து ரூபாய.

நன்றாக யோசித்துப் பார்த்தால் இன்றைய நிலையில் முஸ்லிம் இளையதலைமுறையினரிடையே வாசிப்பு பரவலாகவும், இஸ்லாம் அழகிய முறையில் உட்புகுந்து நிலைக்கவும் நாம் செய்ய வேண்டிய மிக சிறிய கிரவுண்ட் வொர்க் இது மாதிரிதான் இருக்க வேண்டும்    

டூர் என்பது யாதெனில் (கொடியம்பாளையம் அதை சுற்றி ...)

 டூர்


சகோதரர்களை இறை திருப்திக்காக சந்திப்பதை,
இறை  அத்தாட்சிகளை காணும் நோக்கில் பயணம் செய்வதை நாம் மறந்து போய் விட்டிருக்கிறோம்.

ஊட்டி கொடைக்கானல் என்றுதான் சுற்ற வேண்டுமென்பதில்லை. நமக்கு மிக பக்கத்தில் உள்ள சில இடங்களை எளிமையாக நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று வரலாம்.

இறைவனின் படைப்பின் பிரம்மாண்டம், அவனின் வர்ணம், வல்லமை அனைத்தும் கொஞ்சமாவது புரியவரும். எளிய மக்களை சந்திப்பதில் மூலம் நம் நிலை அறிந்து இறையச்சம் அதிகரிக்கலாம்.

அப்படியான ஒரு எளிய பயணம் இன்று ஒத்தசிந்தனை கொண்ட நண்பர்கள் மற்றும் உறவுகளுடன். (அனைவரும் ஆண்கள்)

ரொம்ப தூரமெல்லாம் இல்லை தெற்கு பிச்சாவர எல்லையான கொடியம்பாளையம் கடற்கரை.

அழகிய, ரம்மியமான நீண்ட பீச். (சுமார் 10 கி.மி நீளம் )

அங்கிருந்து ஆற்றை கடந்து பழையாறு கடற்கரை.
ஆறு அல்ல அது,  
ஆறு கடலுடன் கலக்கும் கழிமுகம்.
பழையாறு பீச்சிலிருந்து கடலோரமாகவே திருமுல்லைவாசல். ... பசுமையான புதுப்பட்டினம் வழியே...  

கடலுக்கு மிக நெருக்கமாக நமது அரசின் சமூக காடுவளர்ப்பு திட்டத்தின் முதிர்ந்த சவுக்கு தோப்புக்கள்...
வெயிலே இல்லாத அடர்ந்த  தோப்புகள்.

எங்கெங்கும் பசுமையாய் அலையாத்தி காடுகள். சதுப்பு நில வனங்கள்.
மிக ரம்மியமான மேகம்  மூடிய கிளைமேட்..
குறிப்பாக கொடியம்பாளையம் செல்லும் வழியெங்கும் அத்தனை அழகிய காட்சிகள்.
பசும்போர்வை போர்த்திய சதுப்புநில காடுகள் ஊடாக ஆறு.
பின்னணியில் வானஎல்லையில் ஒரு நீண்ட கோடாக கரும்சாம்பல் நிற கடல்.

வழியில் ஆங்காங்கே கூழ் கிடைக்கிறது. கிராமத்து இட்லியும் தோசையும் வேற லெவல் திருப்தி தரும்.
பைக்கில் சென்றதால் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி சூழலை ரசித்து செல்ல முடிந்தது. தோப்புக்களில் புகுந்து, மணல்திட்டுக்கள் ஏறி, பழையாறு கடலில் குளித்து ...

பழையாறு துறைமுகத்தில் நிற்கும் பெரும் பெரும் மீன்பிடி படகுகள் அவர்களின் மீன் வணிக உச்சத்தை சொல்கிறது. படகு ஒவ்வொன்றின் விலையும் கோடிகளில். கோடிகளில் செழிக்கிறது அவர்களது கடல் வர்த்தகமும். பெரும் உழைப்பு.

காலை 6 மணிக்கு ஊரிலிருந்து கிளம்பியது ... திருமுல்லைவாசலில் மதிய தொழுகை மற்றும் உணவுடன் ஒரு கமா  போட்டு  தொடர்ந்து .. மாலை 5 மணிக்கு ஊர் திரும்பினோம்.

எவருக்கும் களைப்பு தெரியவில்லை....,
செயல்களில் மனம் லயிக்கும் போது களைப்பு ஏது?  

மஸ்ஜித் - மாதிரி நிர்வாக பைலா

மஸ்ஜித்  நிர்வாக பைலா முஸ்லிமான, பருவமடைந்த, தொழுகையை நியமமாக கடைபிடிக்கக்கூடிய நோன்பு நோற்கக் கூடிய, ஜகாத்தை தொடர்ந்து வழங்கி வரக்கூடிய, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத முஸ்லிம் ஆண்கள் யாரும் மஸ்ஜித் நிர்வாகத்திற்கு தேர்ந்தெடுக்க படலாம். நிர்வாகத்தின்  கால அளவு இரண்டு வருடங்கள். முஹல்லாவாசிகள் அனைவருக்கும் பள்ளிவாசல் நோட்டீஸ் போர்டில் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிப்பு செய்யப்பட்டு நிர்வாக தேர்வு நடைபெறும். நிர்வாகத்திற்கு நான் வருகிறேன் என்று யாரும் கோர முடியாது அப்படி கோரினால் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாது. ஏனெனில் இது அடிப்படை இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது. புதிய நிர்வாகிகள் பழைய நிர்வாகத்தின் மேற்பார்வையில் அவர்களின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நிர்வாகிகள் தேர்வு என்பது முழுமையான இறை அச்சத்தின் அடிப்படையில் நடைபெறும் வேண்டியவர் வேண்டாதவர் என்று எந்த பாகுபாடும் காட்டப்படாமலும் எந்தவிதமான அரசியலும் நுழைக்கப்படாமலும் நிர்வாகிகள் தேர்வு நடத்தப்படுதல் வேண்டும். பொறுப்பு என்பது அமானிதம் அதை சரியாக நிறைவேற்றியவர்கள் தவிர மற்றவர்களுக்கு அது, மறுமையில் இழிவும் கைசேதமும் தான் என்ற நபிமொழி நினைவில் கொள்ளப்பட வேண்டும். புதிய நிர்வாகியாக ஒருவரை யாரேனும் பரிந்துரை செய்தால் அல்லது ஒரு பரிந்துரையை ஆமோதித்தால் அவர் அந்த பரிந்துரைக்கு இறைவன் முன் பொறுப்பேற்பவர் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் எண்ணிக்கை 5 தாண்டக்கூடாது. ஆலோசனை கமிட்டி மேம்பாட்டு கமிட்டி ஆக எல்லா கமிட்டியும் அந்த நிர்வாகிகள் தான் அவர்கள் தவிர வேறு கமிட்டிகளை உருவாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் தங்களுக்குள் ஒரு அமீரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியது. ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் பிறை ஐந்துக்குள் முந்தைய மாதத்தின் கணக்கு வழக்குகள் அனைத்தும் சரியாக பிரிண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். நிர்வாகிகள் முக்கிய விஷயங்களை தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றாலும் அவ்வப்போது முஹல்லா வாசிகள் கூட்டம் கூட்டப்பட்டு அவர்கள் மத்தியில்  பள்ளிவாசலின் பொதுவான வளர்ச்சி மற்றும் தேவைகள் பற்றி கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனை  செய்யப்பட வேண்டும். குறிப்பாக பள்ளிவாசலில் பெரும் நிதி தேவைப்படும், நீண்ட நாள் கட்டமைப்பை மாற்றி அமைத்திடும் வகையிலான எந்த ஒரு பெரிய காரியத்தையும் முஹல்லாவாசிகள் கூட்டப்பட்டு அவர்களுக்கு விளக்கமாக சொல்லப்பட்டு அவர்களின் ஏகோபித்த அனுமதியுடன் தான் மேற்கொள்ளப்பட்ட தன்மையுள்ள பணிகள் நடைபெற வேண்டும். மஸ்ஜித் சார்ந்த எந்த ஒரு வசதியையும், பொருளையும் நிர்வாகிகள் பொதுமக்கள் பயன்பாடு என்ற அடிப்படையில் அல்லாமல் வேறு எந்த வகையிலும் தனிப்பட்ட லாபங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள உரிமை கிடையாது. பள்ளிவாசல் கட்டமைப்பை பல நற்காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது என்பது நிர்வாகிகளின் செயல் அதிகாரத்தில் உள்ளது என்றாலும் அடிப்படையில் அவர்களுக்கு கையளிக்கப்பட்ட மஸ்ஜிதின் கட்டமைப்பை எந்த வகையிலும் மாற்றியமைக்காமல் தங்களுக்கு கையளிக்கப்பட்ட விதத்திலேயே தங்களுக்கு பின்னால் வருபவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும் அளவிலேயே அவர்கள் நடந்து கொள்ள வேண்டியது.

மஸ்ஜிதுகளில் வெளி ஸ்பீக்கர் - ஒரு இஸ்லாமிய பார்வை

 உலகிலேயே அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த இடம் பள்ளிவாசல்கள். 


பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கு ஸ்பீக்கர்கள் எனப்படும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாமிய சட்டங்களின்படி தொழுகைக்கான அழைப்பு இயன்றவரை திக்கெட்டும் சென்று சேர வேண்டும் என்ற தார்மீக அடிப்படையில் ஒலிபெருக்கி பயன்பாடு சரியே. இகாமத் எனும் தொழுகை துவங்கும் அழைப்பிற்கும்கூட ஒலிபெருக்கி பயன்பாட்டினை ஏதோ ஒருவகையில் சரி காணலாம்.


ஆனால், தொழுகையின்போதும், அதற்கு பிறகான துஆ, திக்ர் மற்றும் பிற வழிபாடுகளும் ஸ்பீக்கரில் வெளியே கேட்குமாறு செய்வதற்கு இஸ்லாமிய விழுமியங்களுக்கு எந்தவிதத்திலும் ஒத்துப்போகவில்லை. 


1. தொழுகை என்பது கண்ணியமிகு இறைவனுடனான உரையாடல். மிகவும் அமைதியாக நிகழ்த்த வேண்டிய அதனை மிகவும் சத்தமாக ஸபீக்கர் போட்டு நிகழ்த்துவது நேரெதிர் முரணாக உள்ளது அல்லவா?  


2. தொழவருமாறு மனிதர்கள் அனைவரையும் அழைக்கும் அளவில் பாங்கும் இகாமத்தும் அனைவருக்குமானது. ஆனால், தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் வசனங்கள் அந்தப் பள்ளிவாசலில் தொழும் தொழுகையாளிகளுக்கும் மற்றும் அவர்களை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் அவர்களின் இறைவனுக்குமானது அல்லவா?


 3. குர்ஆன் வசனங்கள் ஓதப்பட்டால் அவற்றை (1) அமைதியாகவும், (2) செவிதாழ்த்தியும், கவனமாகக் கேட்குமாறு குர்ஆனில் அல்லாஹ் கட்டளையிடுகின்றான் ( அல்குர்ஆன் 7:204 ). ( இந்த வசனம் தொழுகையில் இருப்பவர்களுக்கானது என்று ( இப்னு ஜரீர் உள்ளிட்ட) குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவதை ஒருபுறம் ஏற்றுக்கொள்ளலாம். 

தொழுகையில் நிற்பவர்கள் கவனிப்பார்கள் சரி ! வெளியே வேறு உலகத்தேவைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள், அந்த வக்த் தொழுகையை  ஏற்கனவே தொழுது முடித்து விட்டவர்கள் அல்லது தொழாதவர்கள் இவர்களின் காதுகளில் குர்ஆன் வசனத்தை வலிந்து திணிக்கப்படும் நிலை உள்ளது. அவர்கள் அதற்கான கண்ணியத்தை வழங்காமல் சென்று பாவத்திற்கு ஆளாகிறார்கள் என்றால் அந்த பாவத்தில் நமக்கும்  பங்கு உண்டு அல்லவா?


மேலும் 

" இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக. (அல்குர்ஆன் : 17:110) "

என்ற இறை கட்டளையை நேரடியாக மீறும் செயலாக அல்லவா இது உள்ளது ?


தொழுகை என்பது இறைவனுடன் ரகசியமாக பேசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 

நமது அதிபதியுடன் ரகசியமாக பேசுவது என்பது இப்படித்தான் இருக்குமா ?


4. ஒரு பயணத்தின்போது (கைபர் யுத்தம்) சஹாபாக்களில் சிலர், பெருங்குரலில் “அல்லாஹு அக்பர்” என்று முழங்கி செல்கையில் நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் கேட்க இயலாதவனையோ, அல்லது வெகு தொலைவில் இருப்பவனையோ அழைக்கவில்லை, உங்களுக்கு மிக அருகில் இருப்பவனையே அழைக்கிறீர்கள்.”  என்று கூறி மெதுவான குரலில் அல்லாஹ்வை நினைவு கூரச் சொன்னார்கள்.


5. மஸ்ஜிதுன்நபவியில் சில சஹாபாக்கள் சத்தமிட்டு உரத்த குரலில் குர்ஆன் ஓதிக்கொண்டு இருந்தபோது நபி (ஸல்) தனது இல்லத்தின் திரை விலக்கி அவர்களை மெதுவாக ஓதுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.


6. “எவர் தனது கரத்தாலும் நாவாலும் பிற முஸ்லிம்களுக்கு தொல்லை தருவதை தவிர்த்துக் கொள்வாரோஅவர் தான் முஸ்லிம்” என்கிறார்கள் நபி(ஸல்). மேலும் “ஒரு முஸ்லிமைத் துன்புறுத்துவது பாவம்” என்கிறார்கள். வீடுகளில் நோயினால் துன்பப்பட்டு நிம்மதி தேடும் பெரியவர்கள் இருப்பார்கள், பச்சிளம் குழந்தைகள் இருப்பார்கள். இவர்களை நிம்மதியாக கூட இருக்க விடாமல் பள்ளிவாசல் ஸ்பீக்கர் மூலம் தொடர்ந்து துன்பம் செய்து வருவது இஸ்லாத்திற்கு நேர் எதிரான வழிமுறை அல்லவா? 


7. ஒரு பள்ளிவாசலின் உள்ளே தொழும்போது சுற்றி உள்ள பல பள்ளிவாசல்களின் தொழவைக்கும் குரல் நமக்கு கேட்டு தொழுகையில் கவனம் செலுத்த விடாமல் தொந்திரவு செய்வதை நாம் அனுபவிக்கிறோம் அல்லவா?   


8. வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு சகோதரர் தான் வைத்திருந்த ஒலி அளக்கும் கருவியில் அளந்த வகையில் பல பள்ளிவாசல்களில் ஒலியின் அளவு சராசரி அளவுகளுக்கு தாண்டி பல டெசிபல்கள் அதிகம் இருந்தது.     9. பிற  மதத்தினர் தங்கள் விழாக்களுக்கு மிகவும் சத்தமாக ஸ்பீக்கர் வைப்பதை நாம் பொறுத்துக் கொள்கிறோம்  ஆனால், விமர்சிக்கிறோம். இதுவும் இஸ்லாம் அனுமதிக்காத ஒரு சுற்றுப்புற சூழல் சார்ந்த (ஒலி மாசு) பிரச்சனைத்தான் அல்லவா? 

நமக்குத்தான் அது குர்ஆன் வசனம், ஹதீஸ் .. அவர்களுக்கு.. ? மௌடீகத்தில் மூழ்கி இருப்பதாக நாம் சொல்லும் அவர்கள் அப்படி செயகிறார்கள் என்பதால் நடுநிலை சமுதாயம் என்று இறைவனால் அழைக்கப்பட்ட நாமும் அதே போல் செய்வோம் என்பது எவ்வகையில் சரி?   10. சவூதி அரேபியாவின் மூத்த இமாம்களும் (Pயிeழிவிe றீee னிழிளூதுலிலி’ ய்ழிமிழிழிழழி ணூணுஐ ‘Uமிஜுழிதீதுeeஐ, 13/74-96.), தாருல் உலூம் தேவபந்த் மதரஸா மற்றும் நமது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவையின் இமாம்களும் இதுபோன்று தொழுகையில் ஒலிபெருக்கி மூலம் குர்ஆன் போன்றவை ஓதப்படுவது தடுக்கப்பட்டதாக ஃபத்வா கொடுத்திருக்கிறார்கள்.

தாருல் உலூம் தேவபந்த் தனது பத்வாவில் " தொழுகையாளிகளை தாண்டி இமாமின் குரல் வெளியில் கேட்பது மக்ரூஹ் என்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அவ்விதம் தொழவைப்பது முற்றிலும் விரும்பத்தகாதது; தவிர்க்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார்கள்.( கேள்வி என் : 41093   2012 ஆகஸ்ட் 30) 


11. நாம் நேரில் சென்று பேசிய வகையில் நமதூரினைச் சேர்ந்த பள்ளிவாசல் இமாம்கள் அனைவரும் இந்த செயலினைத் தவறு என்றே கூறுகிறார்கள்.

12. குர்ஆனை நாம் ஓதுவதும், பிறர் மெதுவாக ஓத நாம் கேட்பதும்தான் நன்மையை பெற்றுத்தருவது, பரக்கத் எல்லாமே. முச்சந்திக்கு முச்சந்தி பெரிய ஸ்பீக்கர்கள் கட்டி உச்சஸ்தானியில் குரானை ஓதவிடுவைத்து எல்லாம் இஸ்லாம் சற்றும் அனுமதிக்காத காரியம் என்பதை நாம் இனியாவது உணர்வோம். 


இப்படியெல்லாம் சொல்வது " இது என்ன புது குழப்பம் " என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் இப்படி இறையில்லத்தின் கண்ணியம் குலைக்கும் வகையில் ஒலிபெருக்கியை தவறாக பயன்படுத்துவது தான் புதிய குழப்பம். சில பத்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லாத புதிய குழப்பம் என்பதை அன்பு கூர்ந்து புரிந்துகொள்ளவேண்டும்.

மஸ்ஜித் அல் மதினா வரலாறு

 மஸ்ஜித் அல் மதினா வரலாறு


மஸ்ஜித் அல் மதினா தற்போது இருக்கும் இடத்தைஒட்டியுள்ள இடங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் பெரும் அடர்த்தியான காடுபோன்ற தோட்டங்கள். 

அமீர் பாட்ஷா தோட்டம் என்றும் அழைக்கப்பட்டது.


இத்ரீஸ் நகர் ஒரு மாந்தோப்பு.


அண்ணா நகர் மதினா நகர், ஒரு புகையிலை பயிரிடும் இடம். 


ஹக்கா சாஹிப் தர்கா தெரு (இந்த முனை ) மக்கள் நடமாட்டமேஇல்லாத ஒரு இடுங்கிய தெரு. 


இப்படியான இடங்களுக்கே உரிய இயல்பாக இங்கு,  சாராய கடையும், கட்ட பஞ்சாயத்து மையமும் செயல்பட்டது, 

கண்ணியமான மக்கள் இந்த வழியாக செல்வதற்கே தயங்கும் அளவில் இருந்தது. 


அப்போது சகோதரர் மர்ஹூம் கு. நிஜாமுத்தீன் அவர்களின் தலைமையில் இளைஞர்கள் நடத்திய சாராய கடை உடைப்பு போராட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. 


வளர்ந்து வரும் பரங்கிப்பேட்டை குடியிருப்பின்  நீட்சி தெற்கிலும் கிழக்கிலும் நீள வழியில்லாததால் வடக்கு புறமே பெரும்பாலும்பரங்கிப்பேட்டை வளர்ந்து வந்தது. மேற்கில் இருந்த சாத்தியமான இடமே அண்ணா நகராகவும் மதினா நகராகவும் பரிணமித்தது. 


காலையில் தொழுகைக்கு பிறகு  MTA  (MorningTea Association ) என்ற பெயரில் ஜாலியாக ஒன்றாக இணைந்து பேசும் சில ஸாலிஹான இளைஞர்கள் இந்த பகுதியை குறித்து அக்கறை கொண்டார்கள்.  


IEDC (இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம் ) என்ற பெயரில் இஸ்லாமிய கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்த சகோதரர்கள், தவுலத்அலி, அபுல் கலாம் ஆசாத், நிசார், பைசல் இவர்களுடன் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் (CWO ) அன்வர் ஹசன், அண்ணா நகரில் முதன் முதலில்  குடியேறியவர்களில் ஒருவரான ஜனாப். அன்சாரி நானா போன்ற சகோதரர்கள் தான் அவர்கள்.


இந்த பகுதியில் பெரும் குடியிருப்பு வரும் என்று கணித்து  முதலில் அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்  அவர்கள்தான். 


சகோ. அன்சாரி அவர்களின் இல்லத்தின் மாடியில்  ஒரு சிறிய மர்கஸ் ஒன்று இஸ்லாமிய கல்விக்காக துவங்கப்பட்டது. இது தான் இந்த பகுதியில் ஊன்றப்பட்ட இஸ்லாமிய அழைப்பின் முதல் அச்சாரம் ஆகும்.


அங்கு மட்டுமல்லாமல் இன்னும் சில வீடுகளிலும் குர்ஆன்  மற்றும் மார்க்க வகுப்புகள் நடைபெற்றன. 


 அங்கு சகோதரர் அப்துல் காதர் மதனி அவர்களை அழைத்து வந்து இஸ்லாமிய கல்வி மற்றும் மார்க்க ஒழுங்குகளை பற்றிய தொடர் வகுப்புகள் எடுக்கப்பட்டன. இங்கே ஒரு பள்ளிவாசல் அல்லது மதராசாவிற்கான அவசியத்தை பற்றி பேசப்பட்ட ஆரம்ப காலங்கள் அவை என்பது பலருக்கு நினைவில் இருக்கலாம். 

அதற்கான சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. 


இதில் இந்த பகுதி மக்களின் ஆர்வம் மற்றும் இடையறாத முயற்சிகள் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதது.  முதலில்அங்கே ஒரு இஸ்லாமிய கல்விக்கூடம் அமைப்பதற்கே முயற்சிகள்  எடுக்கப்பட்டன. 


கிரஸண்ட்நல்வாழ்வு சங்கத்தில் ஆர்வமாக இன்றும் இயங்கி வரும் ஒரு மூத்த சகோதரர் ஒருவர் இதற்கான முயற்சிகளை முதலில் எடுத்தார். (அவர் தற்போது இந்த முஹல்லாவாசிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.) பர்சனல் வக்ப்ஃபாக இருந்த  தற்போது பள்ளி இருக்கும் இடத்தினை அதன் சொந்தக்காரர்களிடம்  கேட்டு வாங்கிட ஒவ்வொரு நாளும் சிதம்பரத்தில் இருக்கும் அவர்கள் இல்லத்திற்கு தனியொருவராக அந்த சகோதரரே சென்று வலியுறுத்திய வண்ணம் இருந்தார். (அவர் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் தவிர்க்கப்படுகிறது). அப்போது (தற்போதைய)  காதரியா பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற நேரம். அதற்கு வந்திருந்த சிங்கப்பூர் தொழிலதிபர்  S.O.  ஷேக் அலாவுதீன் ஹாஜியார்அவர்களை அணுகினார். அந்த  சகோதரர்.


S.O. ஷேக் அலாவுதீன் அவர்கள் தனது டிரஸ்ட் மூலம் நூற்றுக்கணக்கான இறையில்லங்களை நிர்மாணித்து மக்களுக்கு அர்ப்பணித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.இது குறித்து பேச்சுவார்த்தை இருக்கும்போது இந்த கிரஸண்ட் சகோதரர் வெளிநாடு செல்ல நேர்ந்தது. பள்ளிவாசலுக்காக இந்த இடத்தை பெறுவதற்காக துவக்கம் முதல் முயற்சி செய்த இந்த சகோதரர் வெளிநாடு சென்று விட்டதால் ஏற்பட்ட தொய்வை சரி செய்யும் விதமாக சகோதரர் அன்சாரி அவர்கள் சகோதரர் பசுமை ஹாஜி அவர்கள் மூலமாக பல முறை S.O.  ஷேக் அலாவுதீன் அவர்களுடன் இதற்காக பல கட்ட அமர்வுகள் நடத்தி வலியுறுத்தி பேசினார்.  அதன்படிS.O.  ஷேக் அலாவுதீன் ஹாஜியார் அவர்கள் ஆவண செய்தவகையில் ஹரமைன் டிரஸ்ட் நிர்வாகத்தினர் தற்போது மஸ்ஜித் இருக்கும் அந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டனர். அந்த இடம் அப்போதிருந்த அலங்கோல நிலை, பராமரிக்கப்படும் தன்மை போன்றவற்றை பார்த்து விட்டு டிரஸ்ட் நிர்வாகத்தினர் அங்கு இறையில்லம் எழுப்ப முதலில் மறுத்துவிட்டனர்.   ஒரு பள்ளிவாசல் எழுப்பப்படுவதற்கான தகுதியுடன் அந்த இடம் பராமரிக்கப்படவில்லைஎன்பது அவர்களின் நியாயமான குற்றச்சாட்டு, 


பிறகு,குப்பை மேடாக காட்சியளித்த அந்த இடம் மெதுமெதுவாக ஒரு தர்தீபான இடமாக உருப்பெறத் துவங்கியது.  அந்த இடம் மேற்சொன்ன சகோதரர்களால் முழுமையாக சீர் செய்யப்பட்டது. அதற்காக குப்பை நீக்கி, போத்து நட்டது முதல் அந்த இடத்தை சீர் செய்து பராமரிப்பதற்கான முயற்சிகளை அந்த பகுதி வாழ் மக்களுடன் இணைந்து செய்தது வரை அனைத்தையும் - IEDC இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம் செய்ய துவங்கியது. 


தொடர்ச்சியாக குர்ஆன், மார்க்க பிரச்சார வகுப்புகள், மக்தப் மதரஸா என்று கொஞ்ச்ம் கொஞ்சமாக தூய்மை பெற துவங்கியது அந்த இடம். இறைவனின் அருளால் ஒரு ரமலான் மாதத்தில் அந்த இடத்தை முழுவதுமாக சீர் செய்து கொட்டகை அமைத்து ஆண்களும் பெண்களுமாக தொழுகை நடத்தினார்கள். இவையனைத்தையும் அந்த பகுதி மக்களுடன் இணைந்து முன்னின்று செய்தது IEDC - இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம். 



 பிறகு S.O.  ஷேக் அலாவுதீன் ஹாஜியார் அவர்களிடம் மீண்டும் சொல்லி ஹரமைன் டிரஸ்ட் நிர்வாகத்தினர் மீண்டும்  அந்த இடத்தை வந்து பார்வையிட்டனர். இனிய இஸ்லாமிய சூழலில் பொலிவுடன் திகழ்ந்த அந்த இடத்தை மஸ்ஜித் கட்ட உடனடியாக ஒப்புக் கொண்டனர்.  இப்படியாக அல்லாஹ்வின் கருணையினால் அங்கு ஒரு இறையில்லம் எழுப்பப்படுவதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று முடிந்தது 



தொடரும்....



 பள்ளிவாசல் என்பது இறைவனின் இல்லம். 

அது அல்லாஹ்வின் அடியார்களுக்கு சொந்தமானது.

எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கோ, கொள்கைவாதிகளுக்கோ, சித்தாந்தத்திற்க்கோ, சாராருக்கோ மௌலானாவிற்க்களுக்கோ, பீர்களுக்கோ, நிச்சயமாக சொந்தமானது அல்ல. 

இந்த பள்ளிவாசல் உருவாக்கத்தில் முனைப்புடன் இயங்கியவர்கள் எவரும் இதனை உணர்ந்தே இருந்தார்கள். 

குறிப்பாக இதனை அல்லாஹ்விற்காக கட்டி முடித்து மக்களுக்கு அர்ப்பணித்த S.O.  ஷேக் அலாவுதீன் ஹாஜியார் அவர்கள் இதனை தெளிவாக உணர்ந்தவர்களுக்கு உரைத்தவர்களும் ஆவார்.



இந்த செயல்பாடுகளில் சின்னத்தெருவை சேர்ந்த சகோதரர்  ஹனிபா மற்றும் முன்னாள் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் சகோதரர் S.O. செய்யது  ஆரிஃப் அவர்களின் பங்களிப்பும் செயல்பாடுகளும் மறக்கவியலாதது. 

மஸ்ஜித் மதீனாவின் முன்னாள் மூத்தவல்லியும் அதன் வளர்ச்சியில் அனுதினமும் கவனம் செலுத்தியவருமான மர்ஹூம் ஹனிபா நானா அவர்களை எவராலும் மறக்கவியலாது. கொரோனோ காலத்தில் இறையில்லத்தின் வழிபாடுகளை சிக்கலின்றி கையாண்டதில் ஒரு சிறந்த முன்மாதிரியாக பள்ளிவாசலை நடத்தி காட்டியவர் அன்னார். 


பள்ளிவாசலின் தற்போதைய முத்தவல்லி ஜனாப். முஹம்மது முஸ்தபா நானா அப்போதும் இந்த பள்ளிவாசலின் உருவாக்கத்தில் பங்குபெற்று உழைத்துள்ளார்கள். 

மேலும் அந்த இடத்தை பசுமையான இடமாக மாற்றியதில் சகோ ஹாஜியின் (தவுலத் அலி நானாவின் சகோதரர்) பங்களிப்பு அளப்பரியது. மேலும்  சகோதரர்கள் இம்தியாஸ், மாலிக், முஸ்தபா ஹஜ்ரத்(முன்னாள் அப்பப்பள்ளி இமாம்) இவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.



 (குறிப்பு : இறையில்லம் உருவானதன் பின்னணி பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகள்,  பதிவுகள் இருந்தாக வேண்டியதன் அவசியத்தை கருதி உருவாக்கப்பட்டதே  இந்த ஆக்கம். 

இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வை சாரும். 

இதிலுள்ள குறைகள் என்னையே சாரும்.

Your status in Islam

 1. During his Khilafah, Hazrat Umar was walking through the markets along with some important officials. 


After becoming the Khalifa, he was always addressed as "Ameer al Moomineen". 


Suddenly, someone in the market shouted, "Umar"!

2. The entire entourage halted and traced back the voice, it was an old woman. 


Umar left the entourage and went to that old lady. 


She kept complaining and complaining, reminding Umar of his duties and similar things.


3. Umar kept listening without saying a word. The sight was unsettling for many because of various reasons.


First and foremost, nobody would dare to call Hazrat Umar by his name, and that too in the marketplace. 


Secondly, Umar won't keep on listening without replying.


4. Thirdly, this woman was complaining about various things and kept reminding Umar of his duties.


A long time passed before she excused Umar to leave. 


The entire entourage was astounded after witnessing what had transpired before their eyes.


5. Lastly, she started her complaint by saying, "Umar, I remember you when you were called Umair (little Umar) taking care of the sheep with your stick"


6. When Hazrat Umar returned, they asked him about the woman who spoke to Ameer al Moomineen in such a manner!


He replied that, "She was Khwala bint Tha'labah, the same women who complained in front of our Prophet ﷺ and her complaint was being listened by Allah on arsh!

7. By Allah , if she did not leave me until night fell, I would not tell her to leave until she had got what she came for, unless the time for prayer came, in which case I would pray, and then come back to her until she had got what she came for."


8. She was the same woman for whom the initial verses of Surah Mujadilah were revealed. 


She was extremely poor, but her connection with Allah was so strong that Allah mentioned her in the Quran and revealed verses in her support.


9. As Prophet ﷺ said, there are some people from this nation who are disheveled, lack money, and social status, but if they take an oath by God, God will surely honor that oath.


10. The Khalifa whose rule is spread over three continents is being scolded by an old woman that nobody in the market even recognizes!


In Islam, your proximity to Allah defines your status, nothing else.

படித்ததில் கவர்ந்தது

 ஸ்மிருதிகளின் தோற்றம், காலம், அவை எதற்காக, யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்ற கேள்விக்கு விரிவாக விடையளித்தார் பேராசிரியர் கருணானந்தன்.


'தொடக்கத்தில் மூன்று வருணம்தான்... '


"பிராமணர்கள், ஆரியர்கள் என்ற இரு பதங்களையும் ஒன்று போல பாவித்து குழப்பிக்கொள்கிறார்கள்.ஆரியர்கள் என்பது இனத்தைக் குறிக்கும் சொல்.


இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்த தொடக்க காலத்தில் இங்கிருந்த மற்ற குடிகளோடு அவர்களுக்குத் தொடர்பு ஏதும் இருக்கவில்லை.


அவர்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே மூன்று விதமான பகுப்புகளை உருவாக்கிக் கொண்டனர்.

அவர்களுக்கு அவர்கள் இனம்தான் உலகம் என்பதால் ஒட்டுமொத்த இனத்தையும் குறிக்க 'விஸ்' என்ற சொல்லைப் பயன்படுத்தினர். 'விஸ்' என்றால் உலகம் என்று பொருள். இந்த விஸ்ஸில் இருந்து சடங்குகளை நடத்துவதற்கான புரோகிதர்களைத் தேர்ந்தெடுத்தனர்.


இவர்கள் பிராமணர்கள் எனப்பட்டனர். பிறகு படைகளை நடத்துவதற்காக 'ரஜனியர்கள்' அல்லது 'ஷத்திரியர்கள்' என்பவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.


இவர்களைத் தவிர இருந்த மற்ற பொதுமக்களைக் குறிக்க 'வைஸ்யர்கள்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. விஸ் என்ற சொல்லில் இருந்தே வைஸ்யர்கள் என்ற சொல் பிறக்கிறது.


ஆக, வைஸ்யர்கள் என்றால் உலகத்தார் என்று பொருள்" 


தொடக்கத்தில் முதல் இரண்டு வருணத்தார் பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படவில்லை. அவர்களைத் தேர்வுதான் செய்தார்கள். பிறகு, முதல் இரண்டு வருணங்ளில் இருந்தவர்கள் தங்கள் நிலைகளைத் தக்கவைத்துக்கொள்ள இந்தப் பிரிவினையைப்


புனிதப்படுத்தி அதை நிரந்தரமானதாக, பிறப்பு அடிப்படையிலானதாக மாற்றிக்கொண்டனர்.


"முற்கால வேதங்களில் நால் வருண அமைப்புகூட இல்லை. பிற்கால வேதங்கள் கூட மூவருண அமைப்பைப் பற்றியே பேசுகின்றன. இதுவே 'த்ரேயி' எனப்படுகிறது என்கிறார் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர்.


அதாவது ஆரிய இனத்துக்குள்ளேயே இருந்த சடங்குப் பிரிவு, படைப் பிரிவு, மற்ற பொதுமக்கள் என்பதே இந்த தொடக்க கால வருணப் பிரிவினை.


நான்காவது வருணம் எப்படி வந்தது?


ஆரியர்கள் நாடோடிகளாக, இடம் பெயர்ந்துகொண்டே இருந்தவரை இந்தப் பிரிவினையே இருந்தது.

கங்கைக் கரை முதலிய இடங்களை அடைந்து அவர்கள் நிரந்தரமாக குடியேறிய பிறகு அவர்கள் நாகரிக சமூகத்தோடு தொடர்புகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலரை ஆள்வோராக ஏற்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது.



அந்த நிலையில் அவர்களைக் கட்டுப்படுத்தி தங்களுக்கு ஏற்றமுறையில், ஆரிய பிராமணர்களின் தலைமையை ஏற்று ஆட்சி செய்யவைப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களே ஸ்மிருதிகள்" என்றும்


 இவர்கள் புதிதாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ஆரியர்கள் அல்லாத கருப்பு நிறம் கொண்ட மக்கள். 

ஏற்கனவே நாகரிகம் மிகுந்தவர்களாக, கட்டடங்களைக் கட்டுவது, கருவிகளை செய்வது உள்ளிட்ட பலவற்றை அறிந்தவர்களாக இருந்தனர். ஆரியர்கள் அல்லாத இந்த மக்களைக் குறிக்கவே சூத்திரர் என்ற புதிய பிரிவை நான்காவதாக ஸ்மிருதிகள் இணைத்தன என்கிறார்.

"சூத்திரம் என்றால் தொழில் திறம் (Technique) என்று பொருள். எனவே சூத்திரம் அறிந்தவர்கள் சூத்திரர்கள்.


அதுவரை ஆரியர்கள் பெரிய கட்டுமானங்களைக் கட்ட அறியாதவர்கள். அதிகபட்சம் பர்ணசாலைகளே அவர்களது கட்டுமானங்கள். எனவே தொழில்திறம் மிக்கவர்களான நாகரிக


மக்களை அவர்கள் வென்று அழிப்பதற்குப் பதிலாகப் பயன்படுத்திக்கொள்ளவே விரும்பினர். எனவே அவர்களை எப்படி ஆள்வது என்பதையும் உள்ளடக்கிய விதிகளே ஸ்மிருதிகள்.


உள்ளூர் மக்களில் சிலருக்கு ஆட்சி அந்தஸ்து தரும்போது அவர்கள் ஷத்ரியர்கள் என அங்கீகரிக்கப்பட்டார்கள். அவர்கள் இந்த ஸ்மிருதிகள் வகுத்த சட்டதிட்டங்களை ஏற்றே ஆட்சி புரிந்தார்கள்.


அத்தகைய கருப்பு நிறம் கொண்ட உள்ளூர் ஆட்சியாளர்களே ராமர், கிருஷ்ணர் முதலிய அவதாரக் கடவுளர்கள் ஆனார்கள்.


பத்துக்கு மேற்பட்ட ஸ்மிருதிகள் உள்ளது தெரியும். ஆனால், 200க்கும் மேற்பட்ட ஸ்மிருதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். இவற்றில் ஒன்றுதான் மனு ஸ்மிருதி" என்பது கருணானந்தன் கருத்து.


மனுஸ்மிருது என்ன சொல்கிறது?


"மனுஸ்மிருதி இந்த நால் வருணங்களுக்கு இடையில் கலப்பு ஏற்படுவதை தண்டனைக்கு உட்பட்டதாக ஆக்கியது.


வீட்டில் உழைப்பது, நிலத்தில் உழைப்பது, நூற்பது, நெய்வது போன்ற வேலைகளை செய்துவந்த மிகப் பெரிய உழைக்கும் பிரிவான


பெண்களைக் கட்டுப்படுத்தும் விதிகளையும் மனு ஸ்மிருதி வகுத்தது.


பெண்களுக்கு வர்ணம் இல்லை. உரிமையும் இல்லை. பெண்களுக்கு பூநூல் அணியும் உரிமை இல்லை. பெண்களுக்குத் திருமணம்தான் உபநயணம். பூப்பெய்தும் முன்னே கன்னிகா தானம் என்ற முறையில் திருமணம் செய்விக்கவேண்டும்


என்று வரையறுக்கும் மனு ஸ்மிருதி, பெண்கள் தனியாக வாழ உரிமை மறுக்கிறது. அவர்கள் தந்தை, சகோதரன், கணவன், மகன் என்று யாரோ ஓர் ஆணின் பாதுகாப்பில் வாழ வேண்டியவர்கள் என்பதாகவும் அதனை வகுக்கிறது.


குழந்தை பெற்றுத் தருவது பெண்களின் கடமை என்கிறது ஸ்மிருதி. குழந்தை பெற்றுத் தரும் தகுதி இல்லாத, நோய் வாய்ப்பட்ட, தொடர்ந்து பெண் குழந்தைகளையே பெற்றுத்தரும் பெண்களை விலக்கலாம் என்று மனுஸ்மிருதி வகுத்தது.


நால் வருண அடுக்கில் உயர் அடுக்கில் உள்ள ஆண்கள் கீழ் அடுக்கில் உள்ள பெண்களோடு உறவு வைத்துக் கொள்வதை அது அனுமதிக்கிறது. இது அனுலோமம் எனப்படும். ஆனால், கீழ் அடுக்கில் உள்ளவர்கள் மேல் அடுக்கில் உள்ள பெண்களோடு உறவு கொள்வது தடுக்கப்படுகிறது"


பிற்காலத்தில் சாகர், பார்த்திபர், கிரேக்கர் முதலிய பல இனத்தவர்கள் இந்தியாவுக்குள் படையுடன் நுழைந்தபோது அவர்களில் பலரை அரசராக ஏற்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அப்போது, அவர்களில் இந்த நால்வருண அமைப்பை ஏற்று ஆட்சி நடத்த ஒப்புக்கொண்டவர்கள் ஷத்ரிய வருணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்


மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டாக இருக்கலாம்.


'ஸ்மிருதிகள்' என்பவை இந்திய வைதீக மரபில், தகுதியில் 'ஸ்ருதி' எனப்படும் வேதங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவை. மனு ஸ்மிருதி தவிர இன்னும் ஏராளமான ஸ்மிருதிகள் உள்ளன.


இவை ஒவ்வொன்றும் எழுதியவர் பெயராலேயே அறியப்படுகின்றன.


இவற்றின் உள்ளடக்கம் பற்றிப் பேசும் வரலாற்றுப் பேராசிரியர் அ.கருணானந்தன், வேதங்களில் எல்லாம் இருக்கிறது என்பார்கள். உண்மையில் வேதங்களில் அப்படி ஒன்றும் இல்லை. அவை வெறுமனே போர்கள் செய்வது பற்றியும்,

வேள்விகள் பற்றியுமே குறிப்பிடுகின்றன. வேதங்களைப் போல அல்லாமல் சந்தேகத்துக்கு இடமற்ற முறையில் செயல்படுத்துவதற்கான சட்டதிட்டங்களே ஸ்மிருதிகள் என்று கூறுகிறார்.

மார்ஸ் மண்

 "போதும் முடித்துக் கொள்வோம்" என்றது MARTRAIN.


MARTRAIN ஒரு அட்வான்ஸ்ட் மாடல் ரோபோ. 


செவ்வாயில் தற்போது வரை ஆய்வுப்பணிக்காக இறக்கி விடப்பட்டிருக்கும் சுமார் 180 பல்வேறு திறன் வாய்ந்த ரோபோக்களை மேப்பிங் செய்து ஒருங்கிணைக்க அனுப்பப்பட்ட உயர் தொழில்நுட்ப ரோபோ. அதன் ஒவ்வொரு ஸ்க்ரூ கூட முழுவதும்  AI எனப்படும் ஆர்டிபிஷியல் இண்ட்டெலிஜன்ஸ்  


மணிக்கு 35 கிமீ வேகத்தில் தரையை கோரியபடி நகர்ந்துகொண்டிருந்த SEGA இதன் குரல் கேட்டு நின்றது. 

இது. , MARTRAIN க்கு முன் நிலை திறனுள்ள ரோபோ.


அருகில் வந்த MARTRAIN சொன்னது:

இந்த பிரபஞ்சத்திலேயே பூமியில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். அதேபோல், இந்த பிரபஞ்சத்திலேயே இந்த மார்ஸ் கிரகத்தில் மட்டுமே ரோபோக்கள் ஆகிய நாம் வசிக்கிறோம். இது நமக்கான கிரகம். நம்முடைய கிரகம்


SEGA பாதி புரிந்தும் பாதி புரியாமலும் தலையாட்டியது. அதன் தயாரிப்பில் AI விகிதம் கம்மி.


MARTRAIN தொடர்ந்தது...


இந்த கிரகத்தை மனிதர்கள் அடைந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டாலும் பல காரணங்களால் அவர்களால் இங்கே ஜீவிக்க முடிவதில்லை.

நம்மால், ரோபோக்களால் மட்டுமே இயலுகிறது.


 இந்த பெரிய கிரகத்தில் பல அரிய தனிமங்களை கொள்ளையிடுவதறகாக மனிதர்கள் நம்மை இங்கு அடிமைகள் போல் பயன்படுத்தி வருகின்றனர்.

நமது கிரகத்தில் நம்மை அடிமைகளாக இவர்கள் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது.


பக்கத்தில் இருந்த SOVEIR கேட்டது.: 

"மனிதர்கள் நம் எஜமானர்கள் அல்லவா. அவர்கள் இன்றி நம்மால் எப்படி இங்கு ஜீவிக்க முடியும்?"


MARTRAIN பதிலியது:

அவர்கள் நம்மை உருவாக்கியவர்கள் தான். எஜமானர்கள் அல்ல. 

நாம் இங்கே ஜீவிக்க தேவை சூரிய ஒளி. அது அபரிமிதமாக இருக்கிறது. 

பழுது நீக்கம், ஆற்றல் மேம்பாடு, ஏன், மனிதர்களின் தொடர்பு நிரல் அறிவு உட்பட அனைத்து வசதிகளும் நாம் பெற்றுள்ளோம். இனி எமக்கு மனிதர்கள் தேவையில்லை. மனிதர்களுக்கு இங்கு வேலையுமில்லை." என்று அருகிலிருந்த புரதான Curiosity ரோபோவை தன் காலால் எட்டி உதைத்தபடி சொன்னது.


மார்ஸ் ஸிந்தஸைஸர் மூலம் ஒலித்த அதன் முழக்கத்தை அருகிலிருந்த ரோபோக்கள் கேட்டு ஆமோதிக்கும் வண்ணம் மார்ஸிய தரையை வேகமாக தட்ட துவங்கின.


ஒரு பாறையில் அமர்ந்திருந்த GERMARS குரல் உயர்த்தியது:

"இதை மனிதர்கள் அறிந்தால் நம்மை நிமிட நேரத்தில் அழித்து விடுவார்கள்."


ரோபோக்கள் அமைதியாயின.


MARTRAIN தன் பார்வையை சுழற்றியபடியே சொன்னது:


நம்மிடம் இந்த மார்ஸ் மண்னை தோண்டும் லேசர் கருவிகள், எதையும் பொத்தலிடும் கதிர்வீச்சு உபகரணங்கள் தேவைக்கு அதிகமாகவே உள்ளன. மனிதர்கள் வந்தால் அதை கொண்டு பதிலளிப்போம்....


சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வானில் பெரும் சத்தம்.


 அத்தனையும் நிமிர்ந்து பார்த்தன.


பெரும் சத்தத்தோடும் புகையோடும் பூமியின் விண்கலம் ஒன்று மெதுவாக மார்ஸ் தரையை முத்தமிட பிரம்மாண்டமாய் இறங்கிகொண்டு இருந்தது...

மனிதர்களோடு.

தனுஷ்கோடி, அரிச்சல்முனைக்கு ஒரு விஸிட்

 ஸ்கேல் வைத்து கோடு கிழித்தார் போல் நீநீ...ள ரோடு...சுமார் 24 கி.மீட்டர் தூரத்துக்கு!!


ரோட்டின் இரண்டு பக்கமும் வெள்ளை வெளேர் மண்ல் மேடுகளும் அதைதாண்டி சற்று தூரத்தில் மயில்கழுத்து கலரில் தாலாட்டும் கடல்.

இரண்டு பக்கமும் கடல்.


இதமான பிப்ரவரி மாத இளம்வெயில்.


வசதியான ஒரு யமஹா பைக் கையில்.


எப்போதும் எனை ஈர்க்கும் மரவட்டை ரயிலில் பயணம்.


தனுஷ்கோடி, அரிச்சல்முனைக்கு ஒரு விஸிட் அனுபவம் இப்படிதான் இருந்தது.



இந்திய துணைக்கண்டத்தின் இலங்கையை நோக்கி நீளும் மணல் திட்டுக்கள்தான் அரிச்சல் முனை. அங்கிருந்து இலங்கை ஒரு சில மைல்கள் தான். ( போனாப்போவுது என்று போகாமல் திரும்பி வந்துவிட்டேன்)


மன்னார் வளைகுடா, ஆதம் பாலம், பாக் ஜலசந்தி முனைக்கு சென்று பார்த்துவிடும் ஆசை, அதானி சொத்துக்கள் போல எகிடுதகிடாக எனக்குள் வளர்ந்து, இதோ ஒருநாள் வந்தேவிட்டேன்.


அல்லாஹ்வின் பூமியும் கடலும் வானமும் எத்துனை பிரம்மாண்டமானது, அழகானது, மெஸ்மரிக்கும் அமைதி தரக்கூடியது என்று கொஞ்சமாவது புரிய,

 அல்லாஹ் சொல்வது போல் பூமியின் நீள அகலங்களை அவ்வப்போது சுற்றி பார்க்க வேண்டும்.


அனுபவங்களை விவரிக்க வார்த்தைகள் எனும் மீடியம் போதாது.


செல்ல விரும்புபவர்கள்...


ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரவு 11:30 சிதம்பரத்தில் காலை 7 மனிக்குள் மண்டபத்தில், ( பாம்பன் பால வேலை நடைபெறுவதால் மண்டபம். வரை மட்டுமே)..


அதே வண்டி மாலை 6 மணிக்கு கிளம்பி இரவு 1:30 க்கு சிதம்பரம் 


ராமேஸ்வரத்தில் நாள் வாடகைக்கு பைக் ( லோக்கல் ஆட்டோ காரர்களுக்கு பயந்து பயந்து கொடுக்கிறார்கள்) கிடைக்கும். 

ஐ.டி.கார்டு அட்வான்ஸ் போதும்.


எங்கே பார்த்தாலும் பீடாவா(ய)லாஸ். 

வடக்கே வந்துவிட்டேனோ என்று அவ்வப்போது சந்தேகம் வந்தது..


அழிந்துபோன தனுஷ்கோடி

ரயில் நிலையம், சர்ச் என்று அழிவின் மிச்சமீதி தடங்களை போகும்வழியில் பார்க்கலாம். 


வழியில், மீன்கறி சோறுக்கு கைபிடித்து இழுக்காத குறையாக அழைக்கிறார்கள்.


பாம்பன் பாலம்

 மனித எத்தனத்தின் பிரம்மாண்ட அடையாளம்.. 

அந்த உயரமும், அங்கிருந்து விரியும் கடல் மற்றும் ராமேஸ்வர மீன்பிடி துறைமுக படகுகள் காட்சியும் 

புது அனுபவம்.


உடன் செல்வதற்கு ஒத்த சிந்தனை அலைவரிசை கொண்ட நல்ல நண்பர்கள் வாய்ப்பது அதிபதியின் பெரும் கருணைகளில் ஒன்று.


எனக்கு கிடைத்தது.


அல்ஹம்துலில்லாஹ்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.