Wednesday 3 April 2024

மஸ்ஜிதுகளில் வெளி ஸ்பீக்கர் - ஒரு இஸ்லாமிய பார்வை

 உலகிலேயே அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த இடம் பள்ளிவாசல்கள். 


பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கு ஸ்பீக்கர்கள் எனப்படும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாமிய சட்டங்களின்படி தொழுகைக்கான அழைப்பு இயன்றவரை திக்கெட்டும் சென்று சேர வேண்டும் என்ற தார்மீக அடிப்படையில் ஒலிபெருக்கி பயன்பாடு சரியே. இகாமத் எனும் தொழுகை துவங்கும் அழைப்பிற்கும்கூட ஒலிபெருக்கி பயன்பாட்டினை ஏதோ ஒருவகையில் சரி காணலாம்.


ஆனால், தொழுகையின்போதும், அதற்கு பிறகான துஆ, திக்ர் மற்றும் பிற வழிபாடுகளும் ஸ்பீக்கரில் வெளியே கேட்குமாறு செய்வதற்கு இஸ்லாமிய விழுமியங்களுக்கு எந்தவிதத்திலும் ஒத்துப்போகவில்லை. 


1. தொழுகை என்பது கண்ணியமிகு இறைவனுடனான உரையாடல். மிகவும் அமைதியாக நிகழ்த்த வேண்டிய அதனை மிகவும் சத்தமாக ஸபீக்கர் போட்டு நிகழ்த்துவது நேரெதிர் முரணாக உள்ளது அல்லவா?  


2. தொழவருமாறு மனிதர்கள் அனைவரையும் அழைக்கும் அளவில் பாங்கும் இகாமத்தும் அனைவருக்குமானது. ஆனால், தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் வசனங்கள் அந்தப் பள்ளிவாசலில் தொழும் தொழுகையாளிகளுக்கும் மற்றும் அவர்களை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் அவர்களின் இறைவனுக்குமானது அல்லவா?


 3. குர்ஆன் வசனங்கள் ஓதப்பட்டால் அவற்றை (1) அமைதியாகவும், (2) செவிதாழ்த்தியும், கவனமாகக் கேட்குமாறு குர்ஆனில் அல்லாஹ் கட்டளையிடுகின்றான் ( அல்குர்ஆன் 7:204 ). ( இந்த வசனம் தொழுகையில் இருப்பவர்களுக்கானது என்று ( இப்னு ஜரீர் உள்ளிட்ட) குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவதை ஒருபுறம் ஏற்றுக்கொள்ளலாம். 

தொழுகையில் நிற்பவர்கள் கவனிப்பார்கள் சரி ! வெளியே வேறு உலகத்தேவைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள், அந்த வக்த் தொழுகையை  ஏற்கனவே தொழுது முடித்து விட்டவர்கள் அல்லது தொழாதவர்கள் இவர்களின் காதுகளில் குர்ஆன் வசனத்தை வலிந்து திணிக்கப்படும் நிலை உள்ளது. அவர்கள் அதற்கான கண்ணியத்தை வழங்காமல் சென்று பாவத்திற்கு ஆளாகிறார்கள் என்றால் அந்த பாவத்தில் நமக்கும்  பங்கு உண்டு அல்லவா?


மேலும் 

" இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக. (அல்குர்ஆன் : 17:110) "

என்ற இறை கட்டளையை நேரடியாக மீறும் செயலாக அல்லவா இது உள்ளது ?


தொழுகை என்பது இறைவனுடன் ரகசியமாக பேசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 

நமது அதிபதியுடன் ரகசியமாக பேசுவது என்பது இப்படித்தான் இருக்குமா ?


4. ஒரு பயணத்தின்போது (கைபர் யுத்தம்) சஹாபாக்களில் சிலர், பெருங்குரலில் “அல்லாஹு அக்பர்” என்று முழங்கி செல்கையில் நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் கேட்க இயலாதவனையோ, அல்லது வெகு தொலைவில் இருப்பவனையோ அழைக்கவில்லை, உங்களுக்கு மிக அருகில் இருப்பவனையே அழைக்கிறீர்கள்.”  என்று கூறி மெதுவான குரலில் அல்லாஹ்வை நினைவு கூரச் சொன்னார்கள்.


5. மஸ்ஜிதுன்நபவியில் சில சஹாபாக்கள் சத்தமிட்டு உரத்த குரலில் குர்ஆன் ஓதிக்கொண்டு இருந்தபோது நபி (ஸல்) தனது இல்லத்தின் திரை விலக்கி அவர்களை மெதுவாக ஓதுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.


6. “எவர் தனது கரத்தாலும் நாவாலும் பிற முஸ்லிம்களுக்கு தொல்லை தருவதை தவிர்த்துக் கொள்வாரோஅவர் தான் முஸ்லிம்” என்கிறார்கள் நபி(ஸல்). மேலும் “ஒரு முஸ்லிமைத் துன்புறுத்துவது பாவம்” என்கிறார்கள். வீடுகளில் நோயினால் துன்பப்பட்டு நிம்மதி தேடும் பெரியவர்கள் இருப்பார்கள், பச்சிளம் குழந்தைகள் இருப்பார்கள். இவர்களை நிம்மதியாக கூட இருக்க விடாமல் பள்ளிவாசல் ஸ்பீக்கர் மூலம் தொடர்ந்து துன்பம் செய்து வருவது இஸ்லாத்திற்கு நேர் எதிரான வழிமுறை அல்லவா? 


7. ஒரு பள்ளிவாசலின் உள்ளே தொழும்போது சுற்றி உள்ள பல பள்ளிவாசல்களின் தொழவைக்கும் குரல் நமக்கு கேட்டு தொழுகையில் கவனம் செலுத்த விடாமல் தொந்திரவு செய்வதை நாம் அனுபவிக்கிறோம் அல்லவா?   


8. வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு சகோதரர் தான் வைத்திருந்த ஒலி அளக்கும் கருவியில் அளந்த வகையில் பல பள்ளிவாசல்களில் ஒலியின் அளவு சராசரி அளவுகளுக்கு தாண்டி பல டெசிபல்கள் அதிகம் இருந்தது.     9. பிற  மதத்தினர் தங்கள் விழாக்களுக்கு மிகவும் சத்தமாக ஸ்பீக்கர் வைப்பதை நாம் பொறுத்துக் கொள்கிறோம்  ஆனால், விமர்சிக்கிறோம். இதுவும் இஸ்லாம் அனுமதிக்காத ஒரு சுற்றுப்புற சூழல் சார்ந்த (ஒலி மாசு) பிரச்சனைத்தான் அல்லவா? 

நமக்குத்தான் அது குர்ஆன் வசனம், ஹதீஸ் .. அவர்களுக்கு.. ? மௌடீகத்தில் மூழ்கி இருப்பதாக நாம் சொல்லும் அவர்கள் அப்படி செயகிறார்கள் என்பதால் நடுநிலை சமுதாயம் என்று இறைவனால் அழைக்கப்பட்ட நாமும் அதே போல் செய்வோம் என்பது எவ்வகையில் சரி?   10. சவூதி அரேபியாவின் மூத்த இமாம்களும் (Pயிeழிவிe றீee னிழிளூதுலிலி’ ய்ழிமிழிழிழழி ணூணுஐ ‘Uமிஜுழிதீதுeeஐ, 13/74-96.), தாருல் உலூம் தேவபந்த் மதரஸா மற்றும் நமது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவையின் இமாம்களும் இதுபோன்று தொழுகையில் ஒலிபெருக்கி மூலம் குர்ஆன் போன்றவை ஓதப்படுவது தடுக்கப்பட்டதாக ஃபத்வா கொடுத்திருக்கிறார்கள்.

தாருல் உலூம் தேவபந்த் தனது பத்வாவில் " தொழுகையாளிகளை தாண்டி இமாமின் குரல் வெளியில் கேட்பது மக்ரூஹ் என்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அவ்விதம் தொழவைப்பது முற்றிலும் விரும்பத்தகாதது; தவிர்க்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார்கள்.( கேள்வி என் : 41093   2012 ஆகஸ்ட் 30) 


11. நாம் நேரில் சென்று பேசிய வகையில் நமதூரினைச் சேர்ந்த பள்ளிவாசல் இமாம்கள் அனைவரும் இந்த செயலினைத் தவறு என்றே கூறுகிறார்கள்.

12. குர்ஆனை நாம் ஓதுவதும், பிறர் மெதுவாக ஓத நாம் கேட்பதும்தான் நன்மையை பெற்றுத்தருவது, பரக்கத் எல்லாமே. முச்சந்திக்கு முச்சந்தி பெரிய ஸ்பீக்கர்கள் கட்டி உச்சஸ்தானியில் குரானை ஓதவிடுவைத்து எல்லாம் இஸ்லாம் சற்றும் அனுமதிக்காத காரியம் என்பதை நாம் இனியாவது உணர்வோம். 


இப்படியெல்லாம் சொல்வது " இது என்ன புது குழப்பம் " என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் இப்படி இறையில்லத்தின் கண்ணியம் குலைக்கும் வகையில் ஒலிபெருக்கியை தவறாக பயன்படுத்துவது தான் புதிய குழப்பம். சில பத்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லாத புதிய குழப்பம் என்பதை அன்பு கூர்ந்து புரிந்துகொள்ளவேண்டும்.

No comments: