Wednesday 3 April 2024

மஸ்ஜித் - மாதிரி நிர்வாக பைலா

மஸ்ஜித்  நிர்வாக பைலா முஸ்லிமான, பருவமடைந்த, தொழுகையை நியமமாக கடைபிடிக்கக்கூடிய நோன்பு நோற்கக் கூடிய, ஜகாத்தை தொடர்ந்து வழங்கி வரக்கூடிய, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத முஸ்லிம் ஆண்கள் யாரும் மஸ்ஜித் நிர்வாகத்திற்கு தேர்ந்தெடுக்க படலாம். நிர்வாகத்தின்  கால அளவு இரண்டு வருடங்கள். முஹல்லாவாசிகள் அனைவருக்கும் பள்ளிவாசல் நோட்டீஸ் போர்டில் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிப்பு செய்யப்பட்டு நிர்வாக தேர்வு நடைபெறும். நிர்வாகத்திற்கு நான் வருகிறேன் என்று யாரும் கோர முடியாது அப்படி கோரினால் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாது. ஏனெனில் இது அடிப்படை இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது. புதிய நிர்வாகிகள் பழைய நிர்வாகத்தின் மேற்பார்வையில் அவர்களின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நிர்வாகிகள் தேர்வு என்பது முழுமையான இறை அச்சத்தின் அடிப்படையில் நடைபெறும் வேண்டியவர் வேண்டாதவர் என்று எந்த பாகுபாடும் காட்டப்படாமலும் எந்தவிதமான அரசியலும் நுழைக்கப்படாமலும் நிர்வாகிகள் தேர்வு நடத்தப்படுதல் வேண்டும். பொறுப்பு என்பது அமானிதம் அதை சரியாக நிறைவேற்றியவர்கள் தவிர மற்றவர்களுக்கு அது, மறுமையில் இழிவும் கைசேதமும் தான் என்ற நபிமொழி நினைவில் கொள்ளப்பட வேண்டும். புதிய நிர்வாகியாக ஒருவரை யாரேனும் பரிந்துரை செய்தால் அல்லது ஒரு பரிந்துரையை ஆமோதித்தால் அவர் அந்த பரிந்துரைக்கு இறைவன் முன் பொறுப்பேற்பவர் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் எண்ணிக்கை 5 தாண்டக்கூடாது. ஆலோசனை கமிட்டி மேம்பாட்டு கமிட்டி ஆக எல்லா கமிட்டியும் அந்த நிர்வாகிகள் தான் அவர்கள் தவிர வேறு கமிட்டிகளை உருவாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் தங்களுக்குள் ஒரு அமீரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியது. ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் பிறை ஐந்துக்குள் முந்தைய மாதத்தின் கணக்கு வழக்குகள் அனைத்தும் சரியாக பிரிண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். நிர்வாகிகள் முக்கிய விஷயங்களை தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றாலும் அவ்வப்போது முஹல்லா வாசிகள் கூட்டம் கூட்டப்பட்டு அவர்கள் மத்தியில்  பள்ளிவாசலின் பொதுவான வளர்ச்சி மற்றும் தேவைகள் பற்றி கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனை  செய்யப்பட வேண்டும். குறிப்பாக பள்ளிவாசலில் பெரும் நிதி தேவைப்படும், நீண்ட நாள் கட்டமைப்பை மாற்றி அமைத்திடும் வகையிலான எந்த ஒரு பெரிய காரியத்தையும் முஹல்லாவாசிகள் கூட்டப்பட்டு அவர்களுக்கு விளக்கமாக சொல்லப்பட்டு அவர்களின் ஏகோபித்த அனுமதியுடன் தான் மேற்கொள்ளப்பட்ட தன்மையுள்ள பணிகள் நடைபெற வேண்டும். மஸ்ஜித் சார்ந்த எந்த ஒரு வசதியையும், பொருளையும் நிர்வாகிகள் பொதுமக்கள் பயன்பாடு என்ற அடிப்படையில் அல்லாமல் வேறு எந்த வகையிலும் தனிப்பட்ட லாபங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள உரிமை கிடையாது. பள்ளிவாசல் கட்டமைப்பை பல நற்காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது என்பது நிர்வாகிகளின் செயல் அதிகாரத்தில் உள்ளது என்றாலும் அடிப்படையில் அவர்களுக்கு கையளிக்கப்பட்ட மஸ்ஜிதின் கட்டமைப்பை எந்த வகையிலும் மாற்றியமைக்காமல் தங்களுக்கு கையளிக்கப்பட்ட விதத்திலேயே தங்களுக்கு பின்னால் வருபவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும் அளவிலேயே அவர்கள் நடந்து கொள்ள வேண்டியது.

No comments: