டூர்
சகோதரர்களை இறை திருப்திக்காக சந்திப்பதை,
இறை அத்தாட்சிகளை காணும் நோக்கில் பயணம் செய்வதை நாம் மறந்து போய் விட்டிருக்கிறோம்.
ஊட்டி கொடைக்கானல் என்றுதான் சுற்ற வேண்டுமென்பதில்லை. நமக்கு மிக பக்கத்தில் உள்ள சில இடங்களை எளிமையாக நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று வரலாம்.
இறைவனின் படைப்பின் பிரம்மாண்டம், அவனின் வர்ணம், வல்லமை அனைத்தும் கொஞ்சமாவது புரியவரும். எளிய மக்களை சந்திப்பதில் மூலம் நம் நிலை அறிந்து இறையச்சம் அதிகரிக்கலாம்.
அப்படியான ஒரு எளிய பயணம் இன்று ஒத்தசிந்தனை கொண்ட நண்பர்கள் மற்றும் உறவுகளுடன். (அனைவரும் ஆண்கள்)
ரொம்ப தூரமெல்லாம் இல்லை தெற்கு பிச்சாவர எல்லையான கொடியம்பாளையம் கடற்கரை.
அழகிய, ரம்மியமான நீண்ட பீச். (சுமார் 10 கி.மி நீளம் )
அங்கிருந்து ஆற்றை கடந்து பழையாறு கடற்கரை.
ஆறு அல்ல அது,
ஆறு கடலுடன் கலக்கும் கழிமுகம்.
பழையாறு பீச்சிலிருந்து கடலோரமாகவே திருமுல்லைவாசல். ... பசுமையான புதுப்பட்டினம் வழியே...
கடலுக்கு மிக நெருக்கமாக நமது அரசின் சமூக காடுவளர்ப்பு திட்டத்தின் முதிர்ந்த சவுக்கு தோப்புக்கள்...
வெயிலே இல்லாத அடர்ந்த தோப்புகள்.
எங்கெங்கும் பசுமையாய் அலையாத்தி காடுகள். சதுப்பு நில வனங்கள்.
மிக ரம்மியமான மேகம் மூடிய கிளைமேட்..
குறிப்பாக கொடியம்பாளையம் செல்லும் வழியெங்கும் அத்தனை அழகிய காட்சிகள்.
பசும்போர்வை போர்த்திய சதுப்புநில காடுகள் ஊடாக ஆறு.
பின்னணியில் வானஎல்லையில் ஒரு நீண்ட கோடாக கரும்சாம்பல் நிற கடல்.
வழியில் ஆங்காங்கே கூழ் கிடைக்கிறது. கிராமத்து இட்லியும் தோசையும் வேற லெவல் திருப்தி தரும்.
பைக்கில் சென்றதால் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி சூழலை ரசித்து செல்ல முடிந்தது. தோப்புக்களில் புகுந்து, மணல்திட்டுக்கள் ஏறி, பழையாறு கடலில் குளித்து ...
பழையாறு துறைமுகத்தில் நிற்கும் பெரும் பெரும் மீன்பிடி படகுகள் அவர்களின் மீன் வணிக உச்சத்தை சொல்கிறது. படகு ஒவ்வொன்றின் விலையும் கோடிகளில். கோடிகளில் செழிக்கிறது அவர்களது கடல் வர்த்தகமும். பெரும் உழைப்பு.
காலை 6 மணிக்கு ஊரிலிருந்து கிளம்பியது ... திருமுல்லைவாசலில் மதிய தொழுகை மற்றும் உணவுடன் ஒரு கமா போட்டு தொடர்ந்து .. மாலை 5 மணிக்கு ஊர் திரும்பினோம்.
எவருக்கும் களைப்பு தெரியவில்லை....,
செயல்களில் மனம் லயிக்கும் போது களைப்பு ஏது?
No comments:
Post a Comment