கஜா புயல் வீசிய சில வாரங்களுக்கு பின் அதிராம்பட்டினம் சகோதரர் ஒருவரிடம் பேசினேன் அதற்கு பிறகு என் மனதில் எழுந்த எண்ணங்கள் இவை :
அதிராம்பட்டினம் என்றோர் முஸ்லீம் ஊர். மிகப்பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் வாழும் ஊர். என்னதான் பாலைவன எண்ணெய் சம்பளம் ஈர்த்தாலும், காலம் காலமாக அவர்கள் கைக்கொண்டுவந்த அடிப்படை வியாபாரங்களையும் அந்த பகுதியின் சமூக மேலாண்மையையும் அவர்கள் விட்டுத்தரவேயில்லை. ஊரைசுற்றியுள்ள தென்னை தோப்புக்கள் கிட்டத்தட்ட 90 % மேல் அவர்களுடையதுதான். சுற்றுப்பட்டு கிராமங்களுக்கு அவர்கள்தான் சமூக பொருளாதார சார்பு மையம். பஞ்சாயத்து உள்ளிட்ட அதிகார மைய்யங்களும் அவர்களே.
நம்மை கொஞ்சம் பார்ப்போம்...
பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள நிலபுலன்கள் - சொல்லப்போனால் சிலபல கிராமங்களே முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்த காலங்கள் ரொம்ப பண்டைய காலமெல்லாம் அல்ல, மிக சமீபத்தில் கூட இருந்தது.
நமக்கு சொந்தமான நிலங்களில் - நேரிடையாகவோ, குத்தகை விட்டோ - அரிசி முதல் அனைத்தையும் பயிர் செய்து வந்தோம்,
கடல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த வணிகங்களில் 100, 150 வருடங்கள் முன்பு வரை நாம்தான் அவற்றை ஆண்டு வந்தோம். குறிப்பாக மீன், இறால் போன்ற கடல் உணவு சார்ந்த வணிகத்தில் - சில பத்து வருடங்கள் முன்பு வரை - தனி முத்திரை பதித்து வந்தோம். அப்டீன்னா என்பவர்கள் அன்னங்கோயில் சென்று பார்க்கவும்.
மாற்று மருத்துவம் என்று இப்போது சொல்லப்படும் மருத்துவ முறைகளிலும் குறிப்பாக முக்கிய மருத்துவமான யுனானி மருத்துவத்தில் நமதூர் கிட்டத்தட்ட மருத்துவ மையமாக திகழ்ந்தது.
குடும்பம் குடும்பமாக செய்த துணிகளுக்கு சாயமிடுதல், சேமியா ஜவ்வரிசி போன்ற உணவு பதப்படுத்தல் .... என்று அன்றே பொருளீட்டலில் வெரைட்டி காட்டினோம்.
கால்நடை வளர்ப்பில், குறிப்பாக குதிரை வளர்ப்பு, ஆடு, மாடு கோழி வளர்ப்பு இவற்றை வாழ்வியல் கலையின் ஊடாகவே செய்ய பழகி இருந்தோம். இறைச்சி வணிகத்தில் நாம் அன்றும் இன்றும் வேற லெவல் தான்.
சுருக்கமாக சொன்னால் நாம் காலம் காலமாக இந்த பூமியில் அழுத்தமாக கால் பதித்து வாழ்ந்து வந்தோம். இப்போது தரைக்கு மேல் சில நூறு அடிகள் மிதந்து வருகிறோம். வேர்களை மறந்து பிடிப்புக்கள் இழந்து...
நம்மை மிதக்க செய்த அரபு நாடுகளின் எண்ணெய் வாச மாயை தற்போது மங்கத் துவங்கியுள்ளது. மீண்டும் வேர்களை பிடித்து செழிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
அதிராம்பட்டினத்து முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கும் சென்றார்கள்.. தங்கள் ஊரின் பாரம்பரிய அடையாளங்களையும் தக்கவைத்துக்கொண்டார்கள். வயல்வெளிகளில் வேளாண்மை நடந்தது; சுற்றியிருந்த கிராமங்களுக்கு வேலை வழங்கி வந்தார்கள். சமூக மற்றும் பொருளாதார மேலாண்மையை தக்க வைத்துக்கொண்டார்கள்.
கஜா புயல் போல் ஒரு துயரம் நிகழும் போது அவர்கள் மீண்டும் தலை நிமிர ஒரு மாற்று இருந்தது; இருக்கிறது.
நம்மை ஜஸ்ட் லைக் தட் மிஸ் பண்ணிவிட்டு சென்ற ஒரு சுனாமியோ, தானே புயல் போலவோ அல்லது வேறு எதுவுமோ நம்மை உருக்குலைத்தால், சமூக ரீதியாக நம்மை மீள்கட்டமைத்துக்கொள்ள அரபுநாடுகளில் நாம் உயிர் விட்டு சேர்த்த பொருளாதாரம் தவிர வேறு எதுவும் பிடிப்பில்லை நமக்கு.
நமது முன்னோர்கள் கைக்கொண்ட பாரம்பரிய சமூக பொருளாதார வாழ்முறைகளை பற்றி சிந்திக்க நல்லதொரு சந்தர்ப்பம் இது.
இந்த பதிவு நமது நல்லெண்ண சிந்தனைக்கு ...!
அன்புடன்
ஹமீது மரைக்காயர்.
No comments:
Post a Comment