Wednesday, 3 April 2024

இருப்பிட சிக்கல் - யாருக்கு ? உங்களுக்குத்தான் சார்

 இருப்பிட சிக்கல் என்பது எங்கோ பாலஸ்தீன மக்களுக்கு காஷ்மீர் மக்களுக்கு என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தோம்.


மேவாட் பிராந்திய, நூஹ் மாநில  மக்களுக்கு வந்து தற்போது நமக்கு வந்து நிற்கிறது.

இங்கே எதிரி இந்துத்துவாதிகள் அல்ல IL &FS பவர் பிளான்ட்

நமது ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலம் நீர் காற்று ஆகியவை கடுமையாக மாசு அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

நமது அருகாமை கிராமத்து மண்ணில் அதாவது நம் மண்ணில் போரோன் எனும் ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட முப்பது மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

விவசாயம் செய்வதற்கு தகுதியற்ற நிலமாக நமது நிலங்கள் மாறிவிட்டதாக அந்த அறிக்கை சொல்கிறது.

நெய்வேலிக்கு அருகில் உள்ள நிலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவீடு 250 மடங்கு மெர்க்குரி (பாதரசம்) இருப்பதாக ஆய்வு சொல்கிறது.

நெய்வேலி எங்கோ 2500 கிலோமீட்டர் தொலைவில் இல்லை. 25 கிலோ மீட்டர் தான்.

ஏற்கனவே நெய்வேலி பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதால் நமது கடலூர் மாவட்டமே மிகப்பெரும் அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒத்துக் கொண்டிருந்தார்.

தற்போது IL & FS பவர் பிளான்ட் ஒரு பகாசுர அரக்கனாக நம்முன் நிற்கிறது.


உடன் இணைக்க பட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையை பார்வையிடுங்கள்.


பொதுவாக நிலக்கரியை எரிப்பதால் எழும் சாம்பல் (பிளைஆஷ்) தான் ஆபத்து என்பார்கள்,  அது மட்டும் ஆபத்து அல்ல.
நிலக்கரியை எரிப்பதால் கார்பன, மெர்க்குரி, சல்பர்,  முதலிய ரசாயனங்கள் பெருமளவில் வெளிப்பட்டு காற்றையும் நிலத்தையும் நீரையும் நிலத்தடி நீரையும் கடுமையாக பாதிக்கும்.

காரணங்களே தெரியாமல் நாம் அனுபவிக்கும் சுவாசப் பிரச்சினைகள், சிறுநீரக கோளாறுகள், தோல் நோய்கள் இவற்றிற்கு மூல காரணமாக பவர் பிளான்ட் இருக்கலாம்..

 பவர் பிளான்ட்டை சுற்றி 25 கிமீ இடத்தில் உள்ள ப்ளோரா பவுனா என்று சொல்லப்படும் செடி கொடி மரங்களையும் சாம்பல் படிந்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்தொழிக்கும்.

கடந்த காலங்களில் உலகெங்கும் இயங்கிய பவர் பிளான்டுகள் பற்றிய ஆய்வறிக்கைகள் சொல்வது இதைத்தான்.

வாழத் தகுதியற்ற இடமாக கடலூர் ஆகிவிட்டது என்று எங்கோ செவ்வாய் கிரகத்தில் கடலூர் இருப்பதாக நினைத்து பேசி வந்தோம்.
தற்போது நமது ஊரே பத்திரிகை செய்திகளில் முதன்மை இடாத்தில் வரத்துவங்கியுள்ளது

பெரும் போராட்டங்கள் அல்ல ஒரு முணுமுணுப்பு கூட இல்லை
இப்படி ஒரு அழிவு சக்தி வருகிறது என்று கூட தெரியாமலே அமைதியாக இருந்து விட்டோம்.

இப்போது நம் வாழ்வியலுக்கு பெரும் சிக்கலாக வந்து நிற்கும் இதை நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் ?
என்னதான் செய்யப் போகிறோம்?

No comments: