Wednesday 3 April 2024

மஸ்ஜித் அல் மதினா வரலாறு

 மஸ்ஜித் அல் மதினா வரலாறு


மஸ்ஜித் அல் மதினா தற்போது இருக்கும் இடத்தைஒட்டியுள்ள இடங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் பெரும் அடர்த்தியான காடுபோன்ற தோட்டங்கள். 

அமீர் பாட்ஷா தோட்டம் என்றும் அழைக்கப்பட்டது.


இத்ரீஸ் நகர் ஒரு மாந்தோப்பு.


அண்ணா நகர் மதினா நகர், ஒரு புகையிலை பயிரிடும் இடம். 


ஹக்கா சாஹிப் தர்கா தெரு (இந்த முனை ) மக்கள் நடமாட்டமேஇல்லாத ஒரு இடுங்கிய தெரு. 


இப்படியான இடங்களுக்கே உரிய இயல்பாக இங்கு,  சாராய கடையும், கட்ட பஞ்சாயத்து மையமும் செயல்பட்டது, 

கண்ணியமான மக்கள் இந்த வழியாக செல்வதற்கே தயங்கும் அளவில் இருந்தது. 


அப்போது சகோதரர் மர்ஹூம் கு. நிஜாமுத்தீன் அவர்களின் தலைமையில் இளைஞர்கள் நடத்திய சாராய கடை உடைப்பு போராட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. 


வளர்ந்து வரும் பரங்கிப்பேட்டை குடியிருப்பின்  நீட்சி தெற்கிலும் கிழக்கிலும் நீள வழியில்லாததால் வடக்கு புறமே பெரும்பாலும்பரங்கிப்பேட்டை வளர்ந்து வந்தது. மேற்கில் இருந்த சாத்தியமான இடமே அண்ணா நகராகவும் மதினா நகராகவும் பரிணமித்தது. 


காலையில் தொழுகைக்கு பிறகு  MTA  (MorningTea Association ) என்ற பெயரில் ஜாலியாக ஒன்றாக இணைந்து பேசும் சில ஸாலிஹான இளைஞர்கள் இந்த பகுதியை குறித்து அக்கறை கொண்டார்கள்.  


IEDC (இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம் ) என்ற பெயரில் இஸ்லாமிய கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்த சகோதரர்கள், தவுலத்அலி, அபுல் கலாம் ஆசாத், நிசார், பைசல் இவர்களுடன் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் (CWO ) அன்வர் ஹசன், அண்ணா நகரில் முதன் முதலில்  குடியேறியவர்களில் ஒருவரான ஜனாப். அன்சாரி நானா போன்ற சகோதரர்கள் தான் அவர்கள்.


இந்த பகுதியில் பெரும் குடியிருப்பு வரும் என்று கணித்து  முதலில் அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்  அவர்கள்தான். 


சகோ. அன்சாரி அவர்களின் இல்லத்தின் மாடியில்  ஒரு சிறிய மர்கஸ் ஒன்று இஸ்லாமிய கல்விக்காக துவங்கப்பட்டது. இது தான் இந்த பகுதியில் ஊன்றப்பட்ட இஸ்லாமிய அழைப்பின் முதல் அச்சாரம் ஆகும்.


அங்கு மட்டுமல்லாமல் இன்னும் சில வீடுகளிலும் குர்ஆன்  மற்றும் மார்க்க வகுப்புகள் நடைபெற்றன. 


 அங்கு சகோதரர் அப்துல் காதர் மதனி அவர்களை அழைத்து வந்து இஸ்லாமிய கல்வி மற்றும் மார்க்க ஒழுங்குகளை பற்றிய தொடர் வகுப்புகள் எடுக்கப்பட்டன. இங்கே ஒரு பள்ளிவாசல் அல்லது மதராசாவிற்கான அவசியத்தை பற்றி பேசப்பட்ட ஆரம்ப காலங்கள் அவை என்பது பலருக்கு நினைவில் இருக்கலாம். 

அதற்கான சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. 


இதில் இந்த பகுதி மக்களின் ஆர்வம் மற்றும் இடையறாத முயற்சிகள் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதது.  முதலில்அங்கே ஒரு இஸ்லாமிய கல்விக்கூடம் அமைப்பதற்கே முயற்சிகள்  எடுக்கப்பட்டன. 


கிரஸண்ட்நல்வாழ்வு சங்கத்தில் ஆர்வமாக இன்றும் இயங்கி வரும் ஒரு மூத்த சகோதரர் ஒருவர் இதற்கான முயற்சிகளை முதலில் எடுத்தார். (அவர் தற்போது இந்த முஹல்லாவாசிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.) பர்சனல் வக்ப்ஃபாக இருந்த  தற்போது பள்ளி இருக்கும் இடத்தினை அதன் சொந்தக்காரர்களிடம்  கேட்டு வாங்கிட ஒவ்வொரு நாளும் சிதம்பரத்தில் இருக்கும் அவர்கள் இல்லத்திற்கு தனியொருவராக அந்த சகோதரரே சென்று வலியுறுத்திய வண்ணம் இருந்தார். (அவர் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் தவிர்க்கப்படுகிறது). அப்போது (தற்போதைய)  காதரியா பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற நேரம். அதற்கு வந்திருந்த சிங்கப்பூர் தொழிலதிபர்  S.O.  ஷேக் அலாவுதீன் ஹாஜியார்அவர்களை அணுகினார். அந்த  சகோதரர்.


S.O. ஷேக் அலாவுதீன் அவர்கள் தனது டிரஸ்ட் மூலம் நூற்றுக்கணக்கான இறையில்லங்களை நிர்மாணித்து மக்களுக்கு அர்ப்பணித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.இது குறித்து பேச்சுவார்த்தை இருக்கும்போது இந்த கிரஸண்ட் சகோதரர் வெளிநாடு செல்ல நேர்ந்தது. பள்ளிவாசலுக்காக இந்த இடத்தை பெறுவதற்காக துவக்கம் முதல் முயற்சி செய்த இந்த சகோதரர் வெளிநாடு சென்று விட்டதால் ஏற்பட்ட தொய்வை சரி செய்யும் விதமாக சகோதரர் அன்சாரி அவர்கள் சகோதரர் பசுமை ஹாஜி அவர்கள் மூலமாக பல முறை S.O.  ஷேக் அலாவுதீன் அவர்களுடன் இதற்காக பல கட்ட அமர்வுகள் நடத்தி வலியுறுத்தி பேசினார்.  அதன்படிS.O.  ஷேக் அலாவுதீன் ஹாஜியார் அவர்கள் ஆவண செய்தவகையில் ஹரமைன் டிரஸ்ட் நிர்வாகத்தினர் தற்போது மஸ்ஜித் இருக்கும் அந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டனர். அந்த இடம் அப்போதிருந்த அலங்கோல நிலை, பராமரிக்கப்படும் தன்மை போன்றவற்றை பார்த்து விட்டு டிரஸ்ட் நிர்வாகத்தினர் அங்கு இறையில்லம் எழுப்ப முதலில் மறுத்துவிட்டனர்.   ஒரு பள்ளிவாசல் எழுப்பப்படுவதற்கான தகுதியுடன் அந்த இடம் பராமரிக்கப்படவில்லைஎன்பது அவர்களின் நியாயமான குற்றச்சாட்டு, 


பிறகு,குப்பை மேடாக காட்சியளித்த அந்த இடம் மெதுமெதுவாக ஒரு தர்தீபான இடமாக உருப்பெறத் துவங்கியது.  அந்த இடம் மேற்சொன்ன சகோதரர்களால் முழுமையாக சீர் செய்யப்பட்டது. அதற்காக குப்பை நீக்கி, போத்து நட்டது முதல் அந்த இடத்தை சீர் செய்து பராமரிப்பதற்கான முயற்சிகளை அந்த பகுதி வாழ் மக்களுடன் இணைந்து செய்தது வரை அனைத்தையும் - IEDC இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம் செய்ய துவங்கியது. 


தொடர்ச்சியாக குர்ஆன், மார்க்க பிரச்சார வகுப்புகள், மக்தப் மதரஸா என்று கொஞ்ச்ம் கொஞ்சமாக தூய்மை பெற துவங்கியது அந்த இடம். இறைவனின் அருளால் ஒரு ரமலான் மாதத்தில் அந்த இடத்தை முழுவதுமாக சீர் செய்து கொட்டகை அமைத்து ஆண்களும் பெண்களுமாக தொழுகை நடத்தினார்கள். இவையனைத்தையும் அந்த பகுதி மக்களுடன் இணைந்து முன்னின்று செய்தது IEDC - இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம். 



 பிறகு S.O.  ஷேக் அலாவுதீன் ஹாஜியார் அவர்களிடம் மீண்டும் சொல்லி ஹரமைன் டிரஸ்ட் நிர்வாகத்தினர் மீண்டும்  அந்த இடத்தை வந்து பார்வையிட்டனர். இனிய இஸ்லாமிய சூழலில் பொலிவுடன் திகழ்ந்த அந்த இடத்தை மஸ்ஜித் கட்ட உடனடியாக ஒப்புக் கொண்டனர்.  இப்படியாக அல்லாஹ்வின் கருணையினால் அங்கு ஒரு இறையில்லம் எழுப்பப்படுவதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று முடிந்தது 



தொடரும்....



 பள்ளிவாசல் என்பது இறைவனின் இல்லம். 

அது அல்லாஹ்வின் அடியார்களுக்கு சொந்தமானது.

எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கோ, கொள்கைவாதிகளுக்கோ, சித்தாந்தத்திற்க்கோ, சாராருக்கோ மௌலானாவிற்க்களுக்கோ, பீர்களுக்கோ, நிச்சயமாக சொந்தமானது அல்ல. 

இந்த பள்ளிவாசல் உருவாக்கத்தில் முனைப்புடன் இயங்கியவர்கள் எவரும் இதனை உணர்ந்தே இருந்தார்கள். 

குறிப்பாக இதனை அல்லாஹ்விற்காக கட்டி முடித்து மக்களுக்கு அர்ப்பணித்த S.O.  ஷேக் அலாவுதீன் ஹாஜியார் அவர்கள் இதனை தெளிவாக உணர்ந்தவர்களுக்கு உரைத்தவர்களும் ஆவார்.



இந்த செயல்பாடுகளில் சின்னத்தெருவை சேர்ந்த சகோதரர்  ஹனிபா மற்றும் முன்னாள் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் சகோதரர் S.O. செய்யது  ஆரிஃப் அவர்களின் பங்களிப்பும் செயல்பாடுகளும் மறக்கவியலாதது. 

மஸ்ஜித் மதீனாவின் முன்னாள் மூத்தவல்லியும் அதன் வளர்ச்சியில் அனுதினமும் கவனம் செலுத்தியவருமான மர்ஹூம் ஹனிபா நானா அவர்களை எவராலும் மறக்கவியலாது. கொரோனோ காலத்தில் இறையில்லத்தின் வழிபாடுகளை சிக்கலின்றி கையாண்டதில் ஒரு சிறந்த முன்மாதிரியாக பள்ளிவாசலை நடத்தி காட்டியவர் அன்னார். 


பள்ளிவாசலின் தற்போதைய முத்தவல்லி ஜனாப். முஹம்மது முஸ்தபா நானா அப்போதும் இந்த பள்ளிவாசலின் உருவாக்கத்தில் பங்குபெற்று உழைத்துள்ளார்கள். 

மேலும் அந்த இடத்தை பசுமையான இடமாக மாற்றியதில் சகோ ஹாஜியின் (தவுலத் அலி நானாவின் சகோதரர்) பங்களிப்பு அளப்பரியது. மேலும்  சகோதரர்கள் இம்தியாஸ், மாலிக், முஸ்தபா ஹஜ்ரத்(முன்னாள் அப்பப்பள்ளி இமாம்) இவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.



 (குறிப்பு : இறையில்லம் உருவானதன் பின்னணி பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகள்,  பதிவுகள் இருந்தாக வேண்டியதன் அவசியத்தை கருதி உருவாக்கப்பட்டதே  இந்த ஆக்கம். 

இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வை சாரும். 

இதிலுள்ள குறைகள் என்னையே சாரும்.

No comments: