Wednesday, 3 April 2024

அப்ரிதிக்கு குழப்பமாக இருந்தது ....

 அப்ரிதிக்கு குழப்பமாக இருந்தது .


இந்த பள்ளிவாசல்கள் வெளி ஸ்பீக்கர்கள் அலற விடும் விஷயத்தில்...  

என்னடா இது,
குரானிலும் எடுத்து காட்டியாயிற்று

ஹதீஸ்களிலும் எடுத்து காட்டியாயிற்று

சவூதி உலமாக்கள் ஃபத்வா, ஜமாஅத்துல் உலமா, தேவ்பந்த் ஃபத்வா என்று அனைத்தும் சொல்லி பேசியாயிற்று.

கிட்டத்தட்ட ஊரின் அனைத்து உலமாக்களும் மதனியும் கொள்கை வேறுபாடில்லாமல் வெளி ஸ்பீக்கர் தவறு என்று சொல்லிவிட்டார்கள்.

இவர்கள் வக்த் தொழுகைக்கு வெளி ஸ்பீக்கர் ஒலிபரப்பை நிறுத்துவார்கள் என்று பார்த்தால் தராவிஹ்கிற்கு ரெண்டு கீர் போட்டு தூக்கி கடைசியில் நள்ளிரவு 2 மணி தொழுகைக்கும் இப்படி ஐந்தாவது கீரில் அலற விடுவதுதான் அப்ரிதிக்கு குழப்பம் அதிகமாக காரணம்..

என்ன தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ?
 
ஒருவேளை இந்த கிராஅத் இனிமையில் மயங்கி சுத்துப்பட்டு அனைத்து காபிர்களும் ஓடோடி வந்து கலிமா சொல்லி விழுந்து  புரண்டு அழுவார்கள் என்றா ?
அல்லது
 
அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள சிறுகுழந்தைகள் வயதான முதியோர்கள் அனைவரும் அதை கேட்டு கண்ணீர் விட்டு ஏங்குவார்கள் என்றா ?
அல்லது

எப்படியாவது இந்த வோர்ல்டை தாண்டி கேலக்சியை தாண்டி சித்ரத்துல் முன்தஹாவை தட்டி ஜொலிக்க செய்திடவேண்டும் அர்ஷையும் அடைந்திட வேண்டும் இந்த குரல்கள் என்றா ?

அப்ரிதிக்கு  உண்மையிலேயே புரியவில்லை;   குழப்பமாக இருந்தது .

சரி பதிலுக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால்
எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கா  என்று கேட்பவர்கள்,  இன்று .. போதுமானதற்கு மேல் ஆதாரங்கள் கொடுத்தும்
ஷைத்தான் அதை கேட்டு ஓடிவிடுவான், ஒளி பரவும்  என்றெல்லாம் எந்த ஆதாரமில்லாததை சொல்கிறார்கள்.

ஸ்பீக்கரில் குரானை கேட்டு ஷைத்தான் ஓடிவிடுவான் என்றால் தெருவுக்கு 4 ஸ்பீக்கரை கட்டி 24X 7 ஓத  விடலாமே. 
இதற்கு என்ன ஆதாரம்.?
ஒளி பரவும் எனபதும் இதே வகையறா தான்.!!!

தொழுகையில் ஓதப்படுவது பள்ளிவாசலில்  தொழுவதற்கு வந்து வரிசையில் நிற்பவர்களுக்கா அல்லது அண்ட சராசரத்தில் அனைவருக்குமா ? .

சரி
இதுதான் புரியவில்லை என்றால் இன்னொரு கூத்து அதைவிட குழப்பமாக இருந்தது அப்ரிதிக்கு...

 ஜும்ஆ என்பது ஒரே பள்ளிவாசலில் (மீராப்பள்ளி) இருந்தது என்று கேள்விப்பட்டுள்ளேன். அப்புறம் இடமின்மை, கொள்கை காரணங்கள் சொல்லிக்கொண்டு சில பள்ளிகள் பிரிந்து சென்று ஜுமுஆ தொழ துவங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறகு கோவிட் காலத்தில் வேறு வழியில்லாமல் அணைத்து பள்ளிகளிலும் ஜும்மா தொழப்பட்டது   .

ஆனால் பெருநாள் தொழுகை என்பது ஊர்வாசிகள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடுவதற்கான தொழுகை. இந்த வருடம் ஈத் ( பெருநாள் ) தொழுகை கிட்டத்தட்ட அனைத்து சிறிய பெரிய பள்ளிகளிலும் தொழப்பட்டது எந்த வகையிலும் லாஜிக் புரியவில்லை.

இடமின்மையா ?
நபி வழி தொழுகை என்றா ?
தன் பள்ளி என்ற பெருமைக்கா?
வசூல் காரணமா?
இல்லை இன்னும் கோவிட வழிகாட்டுதல்கள் மூளைக்குள் சுற்றி சுற்றி வருகிறதா ?
பள்ளியை விளம்பரப்படுத்தும் அதன் மூலம் தனக்கு விளம்பரம் தேடும் அற்ப முயற்சியா ?

எதுவும் புரியவில்லை
 
சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஊரின் பெருநாட்களில் அனைத்து பள்ளிவாசல்களில் இருந்தும் வெண்ணுடை அணிந்த முஸ்லிம்கள் அணியணியாக திரண்டு தக்பீர் தஹ்மீத் சொல்லியவாரே மீராப்பள்ளியை நோக்கி வருவார்கள். 
நூற்றுக்கணக்கில் நமதூர் வாசிகள் அவ்வாறு திரண்டு வரும் காட்சி கண்கொள்ளா மகோன்னத காட்சியாக இருக்கும் என்றெல்லாம்  வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள். அதெல்லாம் வெறும் கனவாகவே போய்விடுமோ ??....

முஹல்லா தோறும் ஜும்மா
முஹல்லா தோறும் பெருநாள் தொழுகை
அடுத்து முஹல்லா ஐக்கிய ஜமாஅத்
அடுத்து முஹல்லா விற்கென தனி தப்தர் ....

என்று இதன் நீட்சிக்கான சாத்தியக்கூறுகளை யோசித்து பார்த்தால் இன்னும் குழப்பம் அதிகரித்தது அப்ரிதிக்கு

தன்னை ஒரு சிவிலைஸ்ட் சொசைட்டி என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சமுதாயம் செய்யக்கூடிய காரியங்கள் இதுவா என்ற கேள்வி மனதிற்குள் பெரிதாகியது..

இனிமேலாவது தனி தனி பெருநாள் தொழுகைகளை தவிர்த்துவிட்டு முடிந்தளவு ஒரே பள்ளியில் மக்கள் தொழ வருவார்களா என்ற ஆர்வமும் விடை தெரியாத குழப்பமும் சூழ அப்ரிதி ஒரு காகிதத்தை எடுத்து கொண்டு அமர்ந்தான் ...

எழுத ஆரம்பித்தான்


...
..அப்ரிதிக்கு குழப்பமாக இருந்தது ....

No comments: